இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷமி ஆகிய பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்தார்கள்.
போட்டி நடைபெறவுள்ள கான்பூர் மைதானத்தில் பந்துகள் அதிகளவில் ஸ்விங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. அடுத்தடுத்த தினங்களில் மைதானம் முழுமையாக பெளலர்களுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளதால், டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இது இந்திய அணி விளையாடும் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதனையொட்டி, முன்னாள் இந்திய கேப்டன்கள் பிசிசிஐயால் கெளரவிக்கப்பட்டார்கள்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விஜய்யும் ராகுலும் நல்ல தொடக்கத்தை அளித்தார். ராகுல் வழக்கம்போல வேகமாக ஆடினார். மிட்செல் சேன்ட்னர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், அடுத்தச் சில பந்துகளில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த விஜய்யும் புஜாராவும் கவனமாக ஆடினார்கள்.
உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. விஜய் 39, புஜாரா 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இரு அரை சதங்கள்
அதன்பின் விஜய், புஜாரா ஆகிய இருவரும் அரை சதத்தைக் கடந்தார்கள். 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த புஜாரா, சேன்ட்னர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில் கோலி எதிர்பாராதவிதமாக 9 ரன்களுடன் வாக்னர் பந்துவீச்ச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அவசரம் காண்பிக்காமல் நிதானமாக விளையாடி வந்தார் விஜய்.
தேநீர் இடைவேளை சமயத்தில், இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த முரளி விஜய், 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல்நாளின் 2-வது பகுதியிலேயே இந்திய அணியை அசைத்துப் பார்த்தது நியூசிலாந்து. முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால் இதிலிருந்து இந்திய அணி எப்படி மீண்டுவரும் என்கிற ஆவல் ஏற்பட்டது. தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
சரிவு தொடங்கியது
முதல் நாளின் கடைசிப் பகுதியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அசத்தினார்கள். 18 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்த பிறகு, ரோஹித் சர்மாவும் அஸ்வினும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். ஆனால் வழக்கம்போல ரோஹித் சர்மாவின் பொறுப்பற்ற ஆட்டம் இந்திய அணியின் சரிவுக்குக் காரணமாக அமைந்தது. சேன்ட்னர் வீசிய பந்தைத் தூக்கி அடித்த ரோஹித் சர்மா சோதியிடம் கேட்ச் கொடுத்து 35 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு வந்தவேகத்தில் நடையைக் கட்டினார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள்.
சாஹா, போல்ட்டின் அருமையான பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பிறகு அஸ்வின் 40 ரன்களிலும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 16, உமேஷ் யாதவ் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். நியூசிலாந்துத் தரப்பில் போல்ட், சேன்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.