தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற (இடமிருந்து) தமிழக வீரர் மாரியப்பன், தீபா மாலிக், தேவேந்திர ஜஜாரியா, வருண் சிங். 
செய்திகள்

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் பாராட்டு

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட 4 வீரர்களையும், அப்போட்டியில் பங்கேற்றவர்களையும் நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரி

DIN

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட 4 வீரர்களையும், அப்போட்டியில் பங்கேற்றவர்களையும் நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவல்பூர்வ இல்லத்துக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன், வெண்கலம் வென்ற வருண் சிங் (உயரம் தாண்டுதல்), தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா (ஈட்டி எறிதல்), வெள்ளி வென்ற தீபா மாலிக் (குண்டு எறிதல்) ஆகியோர் உள்பட போட்டியில் பங்கேற்ற 19 பேர் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டனர்.
அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் விஜய் கோயல், மத்திய திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் தாண்டி உலக சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பனின் விளையாட்டு ஆர்வம் குறித்து அவரிடம் கேட்ட பிரதமர் மோடி, பின்னர் அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி வாழ்த்துக் கூறினார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் வீட்டில் போட்டியில் பங்கேற்ற 19 பேரையும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரர்களின் தேவைகள், அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ராவ் இந்தர்ஜித் சிங் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பாரா ஒலிம்பிக் குழுத் தலைவராக என்னை மத்திய அரசு கடந்த ஆண்டு நியமித்தது. அதன் பிறகு இந்தியாவில் உள்ள பாரா ஒலிம்பிக் வீரர்களின் திறமையை ஊக்குவிக்க முனைப்புடன் சில நடவடிக்கைகள் எடுத்தேன். எனது முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு ஆதரவு தெரிவித்தார். அதன் விளைவாக, சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டியில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவில் இருந்து தேர்வான 19 வீரர்களும் இந்தியாவின் சார்பில் பாரா ஒலிம்பிக் போட்டியில் அதிகாரப்பூர்வமாக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வீரர்களின் ஆர்வம், கடின உழைப்பு, அயராத பயிற்சிதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம்.
பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு நமது நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக ஆதரவு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். இது அவர்கள் அதிகளவில் பதக்கம் வெல்வதற்கான உந்துதலை அளிக்கும். வரும் காலங்களில் பாரா ஒலிம்பிக் வீரர்கள் அதிக பதக்கங்கள் பெற்று சாதனை படைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் ராவ் இந்தர்ஜித் சிங்.

முதல்வருக்கு கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, "தினமணி' நிருபரிடம் தமிழக வீரர் மாரியப்பன் கூறியது: பிரதமரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை ஊக்குவிக்கும் வகையில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) பயிற்சியாளர் பணி வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது. எனது சொந்த ஊரில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் சில முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துப் பெறவுள்ளேன். அப்போது எனது முயற்சிக்கு அவரிடம் ஆதரவு கோருவேன் என்றார் மாரியப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 459 என்ற மோசமான நிலையை எட்டியது!

“சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

மெஸ்ஸியுடன் ராகுல்காந்தி! | Hyderabad

WWE-யிலிருந்து ஓய்வுபெற்றார் John Cena!

இந்து அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

SCROLL FOR NEXT