செய்திகள்

2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா-239/7

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 86 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் காயம் அடைந்த கே.எல்.ராகுலுக்குப் பதிலாக ஷிகர் தவன் இடம்பெற்றார். நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் உடல்நலக்குறைவு காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஹென்றி நிகோலஸ் சேர்க்கப்பட்டார். சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதிக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளரான மட் ஹென்றி இடம்பெற்றார். நியூஸிலாந்து அணி ராஸ் டெய்லர் தலைமையில் களமிறங்கியது.
அதிர்ச்சித் தொடக்கம்:

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவன் 1 ரன் எடுத்த நிலையில் மட் ஹென்றி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து முரளி விஜய், கேப்டன் விராட் கோலி ஆகியோர் தலா 9 ரன்களில் வெளியேற, 21.4 ஓவர்களில் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
புஜாரா அரை சதம்: இதையடுத்து சேதேஷ்வர் புஜாராவுடன் இணைந்தார் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 47-ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா. நிதானமாக ஆடிய புஜாரா 146 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு 100 பந்துகளில் அரை சதமடித்தார் ரஹானே. நியூஸிலாந்து பெளலர்களை சோதித்த இந்த ஜோடி, இந்தியா 187 ரன்களை எட்டியபோது பிரிந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 219 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து வாக்னர் பந்துவீச்சில் கப்டிலிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

ரஹானே 77: பின்னர் வந்த ரோஹித் சர்மா 2 ரன்களில் நடையைக் கட்ட, அஸ்வின் களம்புகுந்தார். இந்தியா 200 ரன்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 157 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து அஸ்வினுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா. இந்த ஜோடி 31 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 33 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஜடேஜா களம்புகுந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 86 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
சாஹா 14 ரன்களுடனும், ஜடேஜா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் மட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், ஜீதன் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT