செய்திகள்

பிளே ஆப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
இதன்மூலம் இந்தத் தொடரில் 7-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ள பெங்களூர் அணி, அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது.
புணேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த புணேவின் இன்னிங்ஸை அஜிங்க்ய ரஹானேவும், ராகுல் திரிபாதியும் தொடங்கினர். திரிபாதி 11 ரன்களில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சை கோலி கோட்டைவிட்டார்.
இதன்பிறகு அஜிங்க்ய ரஹானே 6 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், சாமுவேல் பத்ரீ பந்துவீச்சில் பவுண்டரியை விரட்டி ரன் கணக்கைத் தொடங்கினார்.
அரவிந்த் வீசிய 5-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிய திரிபாதி, சாஹல் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்டினார். புணே அணி 8.2 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது திரிபாதி ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த மனோஜ் திவாரி பவுண்டரியை அடித்து ரன் கணக்கைத் தொடங்க, சாமுவேல் பத்ரீ வீசிய 12-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார் ஸ்மித்.
சாஹல் வீசிய அடுத்த ஓவரில் மனோஜ் திவாரி ஒரு சிக்ஸரை விளாச, புணேவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஸ்டூவர்ட் பின்னி வீசிய 14-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்டிய ஸ்மித், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு மனோஜ் திவாரியுடன் இணைந்தார் தோனி. இந்த ஜோடி சற்று வேகம் காட்ட, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது புணே. மனோஜ் திவாரி 35 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44, தோனி 17 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூர் தரப்பில் சாமுவேல் பத்ரீ, பவன் நெகி, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பெங்களூர் தோல்வி: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் டிராவிஸ் ஹெட் 2 ரன்களில் நடையைக் கட்ட, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. ஒருபுறம் கேப்டன் கோலி போராடியபோதும், மறுமுனையில் டிவில்லியர்ஸ் 3, கேதார் ஜாதவ் 7, சச்சின் பேபி 2, ஸ்டூவர்ட் பின்னி 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 9.5 ஓவர்களில் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூர்.
இதன்பிறகு வந்த பவன் நெகி 3, ஆடம் மில்னி 5, சாமுவேல் பத்ரீ 2 ரன்களில் வெளியேற, மறுமுனையில் தனிநபராகப் போராடிய கோலி 48 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்து 9-ஆவது விக்கெட்டாக வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது பெங்களூர்.
புணே தரப்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பெர்குசன் 4 ஓவர்களில் ஒரு மெய்டனை வீசியதோடு, 7 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் உள்ளிட்ட இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய பெர்குசன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள புணே அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில் 10 ஆட்டங்களில் விளையாடி 7-ஆவது தோல்வியை சந்தித்திருக்கும் பெங்களூர் அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருக்கிறது. வலுவான வீரர்களைக் கொண்ட பெங்களூர் அணி, முதல் அணியாக ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறது.


இப்படியொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு
ஒரு கேப்டனாக இங்கு நின்று
பேசுவதற்கே கடினமாக இருக்கிறது. நாங்கள் இப்போது பிளே ஆப்
சுற்றுக்கான போட்டியில் இல்லை. எனவே அடுத்து விளையாடவுள்ள
4 ஆட்டங்களிலும் ரசித்துவிளையாடுவோம்.

விராட் கோலி, பெங்களூர் கேப்டன்

இன்றைய ஆட்டங்கள்
பஞ்சாப்-டெல்லி
இடம்: மொஹாலி, நேரம்: மாலை 4
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT