செய்திகள்

விதி விளையாடியது; வலியுடன் விடை பெற்றார் போல்ட்

DIN

உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட், தனது கடைசி உலக சாம்பியன்ஷிப்பின் கடைசிப் போட்டியான 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் காயம் காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

ஏறக்குறைய 10 ஆண்டுகள் உலக தடகளத்தின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த போல்ட், தனது கடைசிப் போட்டியில் தசைப்பிடிப்பின் காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறுங்கையோடு விடை பெற்றது அவருக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் உமர் மெக்லியாட், ஜூலியன் போர்ட், யோகன் பிளேக், உசேன் போல்ட் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி பங்கேற்றது. இதில் 4-ஆவது நபராக உசேன் போல்ட் ஓடினார். அவர் வழக்கம்போல் இந்த முறையும் எதிராளிகளை பின்னுக்குத்தள்ளி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக அவருடைய காலில் தசைப்பிடிப்பு ஏற்பட, அப்படியே நிலைகுலைந்து ஓடுதளத்தில் சரிந்தார். அதைப் பார்த்தும் மைதானத்தில் இருந்த 60 ஆயிரம் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதேநேரத்தில் பிரிட்டன் அணி (37.47 விநாடிகள்) தங்கத்தையும், அமெரிக்கா (37.52) வெள்ளியையும், ஜப்பான் (38.04) வெண்கலத்தையும் வென்றன.

உலக தடகளத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போல்ட், ஒலிம்பிக்கில் 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 4*100 மீ. ஓட்டத்தில் 2 தங்கம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டு மொத்தமாக 11 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார். இதுதவிர 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் உலக சாதனை இன்றளவும் போல்ட் வசமேயுள்ளது.

அவர் தங்கம் வெல்லாத ஒரே போட்டி இந்த உலக சாம்பியன்ஷிப்தான். இந்த முறை 100 மீ. ஓட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஜஸ்டின் கேட்லினிடம் தங்கப் பதக்கத்தைப் பறிகொடுத்த உசேன் போல்டுக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது. 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் பதக்க வாய்ப்பை இழந்தபோதிலும், வழக்கம் போல் மைதானத்தை சுற்றி வந்த உசேன் போல்ட், ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT