செய்திகள்

டாக்கா டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 43 ரன்கள் முன்னிலை

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது.

இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்தார்.
இதையடுத்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய வங்கதேச அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்களில் 260 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல்ஹசன் 84 ரன்களும், தமிம் இக்பால் 71 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ், நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அல்ஹசன் அபாரம்: இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 8, உஸ்மான் கவாஜா 1, நாதன் லயன் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது. மட் ரென்ஷா 6, ஸ்டீவன் ஸ்மித் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரென்ஷாவுடன் இணைந்தார் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 33 ரன்களில் வெளியேற, ரென்ஷா 94 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து அல்ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு மேத்யூ வேட் 5, மேக்ஸ்வெல் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 43.1 ஓவர்களில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 9-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஆஷ்டன் அகரும், பட் கம்மின்ஸýம் தடுப்பாட்டம் ஆடி, வங்கதேச பந்துவீச்சாளர்களை சோதித்தனர். இதனால் ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என நினைத்த வங்கதேசத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
25.2 ஓவர்கள் தடுப்பாட்டம் ஆடிய இந்த ஜோடியை அல்ஹசன் பிரித்தார். கம்மின்ஸ் 90 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்கள் சேர்த்து அல்ஹசன் பந்துவீச்சில் போல்டு ஆனார். இந்த ஜோடி 9-ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து ஆஷ்டன் அகருடன் இணைந்தார் ஜோஷ் ஹேஸில்வுட். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் 71-ஆவது ஓவரில் 200 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. ஹேஸில்வுட் 5 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 74.5 ஓவர்களில் 217 ரன்களோடு முடிவுக்கு வந்தது.
வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 25.5 ஓவர்களில் 68 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 16-ஆவது முறையாகும். மெஹைதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
வங்கதேசம்-45/1: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய வங்கதேசம், 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. தமிம் இக்பால் 30 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். முன்னதாக செளம்ய சர்க்கார் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT