முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற புணே ஆடுகளம் மோசம் என்று ஐசிசி நடுவர் அறிக்கை அளித்துள்ளளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது இந்தியா. இதன்மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரன் அடிப்படையில் 2-ஆவது மோசமான தோல்வியை சந்தித்தது. இதுதவிர தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமல் இருந்த இந்திய அணியின் சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்திய அணி சொந்தமண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2012-இல் இங்கிலாந்திடம் தோற்றது. அதன்பிறகு இப்போதுதான் தோல்வியை சந்தித்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, அதில் 17 வெற்றிகளையும், 3 டிராவையும் பதிவு செய்திருந்தது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமல் இருந்த இந்திய அணியின் சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
இந்தப் போட்டியில் 70 ரன்களை மட்டுமே கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டீவ் ஓ"கீஃப், இந்திய மண்ணில் சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்த வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 1979-80-இல் மும்பையில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்தின் இயான் போத்தம் 106 ரன்களை கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இன்றளவும் வெளிநாட்டு வீரர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சாக உள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 444 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 20 விக்கெட்டுகளையும் இழந்தது. சொந்த மண்ணில் குறைந்த பந்துகளில் இந்திய அணி 20 விக்கெட்டுகளையும் இழந்த போட்டி இதுதான்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற புணே ஆடுகளம் மோசம் என்று ஐசிசி நடுவர் அறிக்கை அளித்துள்ளளார். முதல் டெஸ்டின் ஆட்ட நடுவராக இருந்த கிறிஸ் பிராட், புணே ஆடுகளம் மோசமாக இருந்ததாக ஐசிசிக்கு அறிக்கை அளித்துள்ளார். புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி அதுவாகும்.
இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுக்கு 14 நாள்களில் பதில் அளிக்கும்படி பிசிசிஐக்கு ஐசிசி கடிதம் எழுதியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.