ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோற்றதைத் தொடர்ந்து இலங்கை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இலங்கை டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சன்டிமலும், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியின் கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து ஆரம்பக்கட்ட சுற்றோடு வெளியேறிய இவங்கை அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் மேத்யூஸ்.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்கா சுமதிபாலா புதன்கிழமை கூறியதாவது: மேத்யூஸ் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நாங்கள் அணியை மறுசீரமைத்து தற்போதைய நெருக்கடி நிலையை கடந்து செல்ல விரும்புகிறோம் என்றார்.
மேத்யூஸ், தனது ராஜிநாமா குறித்து கூறியதாவது:
முன்பே எனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய விரும்பினேன். ஆனால் அப்போது அணியை வழிநடத்த சரியான நபர்கள் இல்லை. அதனால் அப்போது ராஜிநாமா செய்யவில்லை.
நான் ராஜிநாமா செய்வதற்கு இப்போது சரியான நேரம் என கருதினேன். எனது நலனைவிட அணியின் நலனே முக்கியம். ஜிம்பாப்வேயுடனான தோல்வி மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமாகும் என்றார்.
இலங்கை டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் சன்டிமலுக்கான முதல் சவால் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. இலங்கை-ஜிம்பாப்வே மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.