செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்: பேட்ஸ்மேன் வரிசையில் புஜாரா 2-ஆவது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, சக நாட்டவரான அஸ்வினை பின்னுக்குத்தள்ளி முதலிடம்

தினமணி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, சக நாட்டவரான அஸ்வினை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
அதேபோல், இந்திய வீரர் புஜாரா, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் இருவரும் தரவரிசையில் இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளனர்.
அந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, முதல் இன்னிங்ஸில் 124 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், 2-ஆவது இன்னிங்ஸில் 52 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதன்மூலம், 7 புள்ளிகளைப் பெற்ற அவர், மொத்தம் 899 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு வந்துள்ளார். அஸ்வின், 862 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார்.
இதன்மூலம், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பிஷன் சிங் பேடி, அஸ்வின் ஆகியோரை அடுத்து முதலிடம் பிடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அதேபோல், 900 அல்லது அதனை நெருங்கிய புள்ளிகள் பெற்ற 2-ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெயரையும் ஜடேஜா பெற்றுள்ளார். முன்னதாக, அஸ்வின் 904 புள்ளிகள் வரையில் பெற்றது குறிப்பிடத்தக்கது.


பேட்ஸ்மேன் தரவரிசை: இந்நிலையில், ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் விளாசியதன் பலனாக, வலதுகை பேட்ஸ்மேனான புஜாரா தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மொத்தம் 4 இடங்கள் முன்னேறியுள்ள அவர், 861 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து, பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-ஆவது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 4-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஸ்மித் தனது தரவரிசை வரலாற்றில், 941 புள்ளிகளைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் 178 ரன்கள், 2-ஆவது இன்னிங்ஸில் 21 ரன்கள் எடுத்ததை அடுத்து அவரது புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
அணிகள் தரவரிசை: இதனிடையே, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இரண்டாவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 2-ஆவது இடம் பிடிக்கும்.
மாறாக, ஆஸ்திரேலியா அதில் தோற்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து இடையேயான கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம்டிரா ஆனாலோ, தென் ஆப்பிரிக்க அணி 2-ஆவது இடத்தைப் பிடிக்கும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி வரையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, ரூ.6.52 கோடி ரொக்கப் பரிசை தட்டிச் செல்கிறது. 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3.26 கோடியும், 3-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.30 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. 4-ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு ரூ.65.26 லட்சம் பரிசுத் தொகை
வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

SCROLL FOR NEXT