ஒருநாள் ஆட்டம்: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலை வகிக்கிறது.
இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலை வகிக்கிறது.
பகலிரவாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய இலங்கை 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் திரிமானி அதிகபட்சமாக 94 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் டிக்வெல்லா 22 ரன்களில் வெளியேற, உடன் வந்த கேப்டன் உபுல் தரங்கா டக் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த சண்டிமல் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த சமரவிக்ரமா ஒரு ரன் கூட எடுக்காத நிலையில், அவரை போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் இமத் வாஸிம்.
பின்னர் வந்த சிறிவர்தனா 13, பிரசன்னா 5 ரன்கள் எடுக்க, திசர பெரேரா டக் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த அகிலா தனஞ்செயா 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஹசன் அலி பந்துவீச்சில் சர்ஃப்ராஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி விக்கெட்டாக காமேஜ் ஒரு ரன் எடுத்து ஹசன் அலி பந்துவீச்சில் போல்டானார்.
சுரங்கா லக்மல் 30 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3, இமத் வாஸிம், ஷாதாப் கான் தலா 2, ஜுனைத் கான், உஸ்மான் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 174 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பாகிஸ்தானில் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 2, ஃபகார் ஸமான் 17, முகமது ஹஃபீஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாபர் ஆஸம், ஷோயிப் மாலிக் ஜோடி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.
இதில் 101 பந்துகளை சந்தித்த பாபர் ஆஸம் 5 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். ஷோயிப் மாலிக் 81 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 69 ரன்களை எட்டினார். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் காமேஜ், தனஞ்ஜெயா, பிரசன்னா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.