ஈடன் கார்டன் மைதானத்தை உலர வைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியர்கள் -ஆடுகளத்தை ஆய்வு செய்த ஆஸ்திரேலிய வீரர்கள். 
செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா 2-ஆவது ஆட்டம்: கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

DIN

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் 2-ஆவது ஆட்டத்தில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹான ஆகியோர் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும். கடந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறிய ரஹானேவும், ரோஹித்தும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியும். 
கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு: மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். கடந்த ஆட்டத்தில் டக் அவுட்டான அவர், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பதிலடி கொடுப்பார் என நம்பலாம். 4-ஆவது பேட்ஸ்மேன் இடத்தில் களமிறங்கிய மணீஷ் பாண்டே, கடந்த ஆட்டத்தில் 2 பந்துகளில் நடையைக் கட்டினார். எனவே அவருக்குப் பதிலாக இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்புள்ளது. 
இதுதவிர கேதார் ஜாதவ், விக்கெட் கீப்பர் தோனி, ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் இந்தியா 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, தோனியும், பாண்டியாவும் அசத்தலாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். கடந்த ஆட்டத்தில் 66 பந்துகளில் 83 ரன்கள் குவித்த பாண்டியா, இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்டும் சாஹல்: வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார்-ஜஸ்பிரீத் பூம்ரா கூட்டணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் குல்தீப் யாதவ்-யுவேந்திர சாஹல் கூட்டணி பலம் சேர்க்கிறது. கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த இந்த ஜோடி, இந்த ஆட்டத்திலும் கலக்கக் காத்திருக்கிறது.
கார்ட்ரைட் நீக்கம்? ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹில்டன் கார்ட்ரைட் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அதனால் டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது. 
டிராவிஸ் ஹெட் 4-ஆவது வீரராக களமிறங்கி வந்தார். அவர் தொடக்க வீரராக களமிறங்குகிறபோது, 4-ஆவது பேட்ஸ்மேன் இடத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் களமிறங்குவார் என தெரிகிறது. டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். கடந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் சிக்ஸர்களை விளாசி மிரட்டிய மேக்ஸ்வெலின் அதிரடி, இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்வரிசை பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், ஆல்ரவுண்டர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நீல் கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கிறது. கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்திய கம்மின்ஸ்-கோல்ட்டர் நீல் கூட்டணி இந்த ஆட்டத்திலும் அபாரமாக பந்துவீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஃபாக்னர், ஸ்டோனிஸ் ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. எனினும் அவருடைய பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களிடம் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே/கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா. 

மைதானம் எப்படி?
போட்டி நடைபெறவுள்ள ஈடன் கார்டன் மைதானம் சமீபகாலமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போதும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். 
இங்கு நடைபெற்ற ஐபிஎல் ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் 63 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். எனவே வியாழக்கிழமை நடைபெறும் ஒரு நாள் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
மிரட்டும் மழை
கடந்த சில தினங்களாக கொல்கத்தாவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக இரு அணி வீரர்களும் பயிற்சி பெறுவது பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமையும் கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் மதியத்துக்கு மேல் மழை குறைந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆட்டம் நடைபெறுவது வருண பகவானின் கையில்தான் உள்ளது. 
14 ஆண்டுகளுக்குப் பிறகு...
ஈடன் கார்டனில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 2003-ஆம் ஆண்டு ஒரு நாள் ஆட்டத்தில் மோதியது. அதில் ஆஸ்திரேலியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விரு அணிகளும் ஈடன் கார்டனில் மோதவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT