காண கண் கோடி வேண்டும்: ரசிகர்கள் வியந்து பாராட்டும் ரொனால்டோவின் கோல்! (விடியோ)
64-வது நிமிடத்தில் பைசைகிள் கிக் மூலமாக அட்டகாசமான கோல் அடித்து கால்பந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்...
சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் புகழ்பெற்ற வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் உலகக் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
இத்தாலியின் டியூரினில் நடைபெற்ற ரியல் மாட்ரிட் - ஜுவென்டஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் 3-0 என்கிற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் கோல் அடித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார் ரொனால்டோ. அதன்பிறகு 64-வது நிமிடத்தில் பைசைகிள் கிக் மூலமாக அட்டகாசமான கோல் அடித்து கால்பந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். மைதானத்தில் இருந்த ஜுவென்டஸ் ரசிகர்களும் ரொன்லாடோவின் அற்புதமான கோலுக்கு தங்களுடைய பாராட்டைத் தெரிவித்தார்கள். இந்த ஆட்டத்தில் கோல்கள் அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் கோலடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ரொனால்டோ.
நேற்றைய ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த பைசைகிள் கிக் கோலின் காணொளி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
கடந்த வருடம், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ஓர் அணி தொடர்ந்து 2-வது முறையாக பட்டம் வென்றது அதுவே முதல்முறையாகும். சாம்பியன்ஸ் லீகில் கடந்த 4 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது மாட்ரிட். அதேநேரத்தில் இந்தப் போட்டியில் அந்த அணி ஒட்டுமொத்தமாக வென்ற 12-வது பட்டம் அது.