முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் தோற்று...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:44 PM
பகிர்:

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கியில் பி பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா, ஏ பிரிவில் 2-ம் இடம் பெற்ற நியூஸிலாந்தை எதிர்கொண்டது. இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து 13 நிமிடத்துக்குள் அடுத்தடுத்து கோல்கள் அடித்து 2-0 என முன்னிலை பெற்று ஆச்சர்யத்தை அளித்தது. 

பெனால்டி ஸ்டிரோக் மூலமாக தனது முதல் கோலை அடித்தது இந்தியா. எனினும் இடைவேளையின்போது நியூஸிலாந்து 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. 

ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் பெனால்டி கார்னர் மூலம் தனது மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது நியூஸிலாந்து. இதனால் மூன்றாவது இடைவேளையின்போது நியூஸிலாந்து அணியே முன்னிலை பெற்றிருந்தது. 

ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் இந்திய அணி கோலடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. பெனால்டி கார்னர் மூலம் ஹர்மன்ப்ரீத் அந்த கோலை அடித்தார். எனினும் இதன்பிறகு இந்திய வீரர்கள் எவ்வளவு முயன்றும் இன்னொரு கோலை அடிக்கமுடியாமல் போனது. இதனால் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று நியூஸிலாந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் தோற்று ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. இதையடுத்து இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கவுள்ளது.

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.