செய்திகள்

கிங்ஸ் லெவனிடம் வீழ்ந்தது டேர்டெவில்ஸ்: ஷ்ரேயஸ் அரைசதம் வீண்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது.
தில்லியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு வீழ்ந்தது.
முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த பஞ்சாபில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல்-ஆரோன் ஃபிஞ்ச் களம் கண்டனர். இதில் ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அவர் அவேஷ் கான் வீசிய 2-ஆவது ஓவரிலேயே ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் மயங்க் அகர்வால் களம் காண, சற்று அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுல் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லியாம் பிளங்கெட் வீசிய 5-ஆவது ஓவரில் அவர் அடித்த பந்து, அவேஷ் கான் கைகளில் தஞ்சமானது. தொடர்ந்து வந்த கருண் நாயர் சற்று நிலைக்க, மறுமுனையில் மயங்க் அகர்வால் 3 பவுண்டரிகள் உள்பட 21 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அவர் பிளங்கெட் வீசிய 8-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார்.
அடுத்து களம் கண்ட யுவராஜ் சிங் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து, 14 ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார். அவேஷ் கான் வீசிய 13-ஆவது ஓவரில் அவர் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். இந்நிலையில், 4 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களை எட்டியிருந்த கருண் நாயர், 17-ஆவது ஓவரில் பிளங்கெட் பந்துவீச்சில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.
பின்னர் வந்தவர்களில் டேவிட் மில்லர் மட்டும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்கள் எடுத்தார். அவர் 18-ஆவது ஓவரில் கிறிஸ்டியன் பந்துவீச்சில் பிளங்கெட்டிடம் கேட்ச் கொடுத்தார். தொடர்ந்து கேப்டன் அஸ்வின் 6, ஆன்ட்ரு டை 3 ரன்களில் வெளியேறினர்.
அதில் அஸ்வின் 20-ஆவது ஓவரில் போல்ட் வீசிய முதல் பந்தை ராகுல் தெவாடியா கைகளில் கொடுத்து ஆட்டமிழந்தார். போல்ட் வீசிய கடைசி பந்தில் ஆன்ட்ரு போல்டானார். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக லியாம் பிளங்கெட் 3, டிரென்ட் போல்ட், அவேஷ் கான் தலா 2, கிறிஸ்டியன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த டெல்லியில் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக பிருத்வி ஷா 22, ராகுல் தெவாடியா 24 ரன்கள் அடித்தனர். 
எஞ்சிய விக்கெட்டுகளில் கிளென் மேக்ஸ்வெல் (12) தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனர். இதனால், 139 ரன்களுக்குள்ளாக சுருண்டது டெல்லி.
பஞ்சாப் தரப்பில் அங்கித் ராஜ்புத், ஆன்ட்ரு டை, முஜீப் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். பரிந்தர் சரண் ஒரு விக்கெட் எடுத்தார். ராஜ்புத் ஆட்டநாயகன் ஆனார்.

இன்றைய ஆட்டம்
மும்பை-ஹைதராபாத்
நேரம்: இரவு 8 மணி
இடம்: மும்பை
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT