இந்தியாவின் வெற்றியைத் தாமதமாக்கிய கம்மின்ஸ்: கடைசி நாளில் வெற்றிக்கு இரு விக்கெட்டுகள் தேவை!
முன்வரிசை பேட்ஸ்மேன்கள் போல கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி இந்திய அணி பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார்....
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை இந்திய அணி வெல்லும் நிலையில் உள்ளது. 4-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 3-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிலெய்ட் டெஸ்ட்டை இந்தியாவும், பெர்த் டெஸ்டை ஆஸ்திரேலியாவும் வென்றதையடுத்து, தொடர் 11 என சமநிலையில் உள்ளது. மெல்போர்னில் நடைபெறும் 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 106, ரோஹித் 63 ரன்களைக் குவித்தனர். பின்னர் ஆடிய ஆஸி. அணி, பூம்ராவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பூம்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற உதவினார். இதன்பிறகு இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆஸி. அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸைப் போல இந்தமுறையும் இந்திய பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசினார்கள். ஃபிஞ்ச் விக்கெட்டை 3 ரன்களில் வீழ்த்தினார் ஜடேஜா. ஹாரிஸ் 13 ரன்களிலும் கவாஜா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி 72 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் பூம்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மிட்செல் மார்ஷ் 10 ரன்களில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மார்ஷுக்கு அடுத்ததாக நன்கு விளையாடிய ஹெட்டை 34 ரன்களில் போல்ட் ஆக்கி வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. ஓரளவு தாக்குப்பிடித்து 67 பந்துகள் எதிர்கொண்ட பெயின் 26 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். பிறகு ஸ்டார்க்கை 18 ரன்களில் போல்ட் ஆக்கினார் ஷமி. 8 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஆட்ட நேரம் மேலும் அரை மணி நேரம் கூடுதலாக்கப்பட்டது. இதனால் இந்த டெஸ்ட் ஆட்டம் 5-வது நாள் வரைக்கும் நீளாது என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்திய அணியால் மீதமுள்ள இரு விக்கெட்டுகளையும் எடுக்கமுடியாமல் போனது. முன்வரிசை பேட்ஸ்மேன்கள் போல கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி இந்திய அணி பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். 86 பந்துகளில் அரை சதமெடுத்து ஆஸி. ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். கம்மின்ஸ் தாக்குப்பிடித்து ஆடாமல் இருந்திருந்தால் இந்திய அணிக்கு வெற்றி இன்றே கிடைத்திருக்கும்.
4-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. கம்மின்ஸ் 61 , லயன் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸி அணிக்கு 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற இன்னமும் 141 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை மழையின் குறுக்கீடு இல்லாத பட்சத்தில் இந்திய அணி மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் 1986-க்குப் பிறகு விளையாடிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஒரே டெஸ்ட் தொடரில் 2 விக்கெட்டுகளைப் பெற்றதில்லை. 1986-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி நிகழ்த்திய சாதனை மீண்டும் நிகழ்த்தப்படுமா?