இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணிக்குப் புதிய கேப்டன்!
இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மட்டுமே இதுவரை விளையாடியுள்ள எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக...
இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மட்டுமே இதுவரை விளையாடியுள்ள எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டூபிளெஸ்ஸிஸ் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். இதேபோல காயம் காரணமாக முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸும் விலகியுள்ளார். இதனால் ஃபர்ஹான் பெஹர்தீன், கிளாசென் ஆகிய இருவரும் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் 23 வயது எய்டன் மார்க்ரம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள மார்க்ரம் தெ.ஆ. ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. 2014-ல் யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்தவர், மார்க்ரம்.
முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஆறு ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. நாளை 2-வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.