முகப்பு
செய்திகள்

புவனேஸ்வர் குமாரின் தாக்குதலில் இருந்து தெ.ஆ. அணியைக் காப்பாற்றியுள்ள டி வில்லியர்ஸ்!

உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 107 எடுத்து சரிவிலிருந்து மீண்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:54 AM
பகிர்:

மூன்றாவது பந்தில் விக்கெட் எடுத்த புவனேஸ்வர் குமார் தொடர்ந்து மூன்று ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். ஆனாலும் டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் முதல் நாள் உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 107 எடுத்து சரிவிலிருந்து மீண்டுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுண் நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

கடந்த 1992-இல் இருந்து இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வென்றதில்லை. 5 தொடர்களை இழந்துவிட்ட நிலையில், ஒரேயொரு தொடரை டிரா செய்துள்ளது.

டாஸ் வென்ற அணி தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் பூம்ரா இடம்பெற்றுள்ளார். இது அவருடைய அறிமுகப்போட்டியாகும். ஷமி, புவனேஸ்வர் குமார், பூம்ரா, பாண்டியா, அஸ்வின் என ஐந்து பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ரஹானேவுக்குப் பதிலாக ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

டெஸ்ட் தொடரின் மூன்றாவது பந்தில் எல்கரை டக் அவுட் ஆக்கினார் புவனேஸ்வர். அடுத்த ஓவரில் எய்டன் மார்க்ரம் 5 ரன்களில் புவனேஸ்வர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அதற்கடுத்த ஓவரில் ஆம்லாவை மூன்று ரன்களில் வெளியேற்றினார் புவனேஸ்வர். இதனால் தான் வீசிய முதல் மூன்று ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். 

ஆனால் 9 ஓவரில் புவனேஸ்வர் பந்துவீச்சில் 4 பவுண்டரிகள் அடித்தார் டி வில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி மேலும் சில விக்கெட்டுகளை எடுத்து தெ.ஆ. அணிக்கு நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டிவில்லியர்ஸும் டூ பிளெஸ்ஸிஸும் பவுண்டரிகளாக அடித்து ரசிகர்களின் பதற்றத்தைத் தணித்தார்கள். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடிக்கு ஆளானது. 25 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது தெ.ஆ. அணி. டி வில்லியர்ஸ் 55 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார். 

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இந்திய அணிக்குச் சரியான பதிலடியைத் தந்துள்ளது. டி வில்லியர்ஸ் 59, டூ பிளெஸ்ஸிஸ் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். புவனேஸ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலும் 19 பவுண்டரிகள் அடித்ததன் மூலம் நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. அடுத்து வரும் இரு பகுதிகளும் கடுமையான போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.