புஜாரா துல்லியமான தடுப்பாட்டம்: தெ.ஆ. பந்துவீச்சை சிரமத்துடன் எதிர்கொள்ளும் இந்திய அணி!
2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் அசத்தலாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட் செய்யத் தீர்மானித்தது. மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 4, அஸ்வின் 2, முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெறும் சூழல் உருவாகியுள்ளது.
இன்று புஜாராவும் ரோஹித் சர்மாவும் மிகவும் கவனமாக விளையாடினார்கள். ரன் எடுக்கும் ஆசையைத் தவிர்த்துவிட்டு தடுப்பாட்டம் ஆடுவதில் குறியாக இருந்தார்கள். இதனால் ஸ்கோர் உயராமல் அப்படியே இருந்தது. எனினும் அவர்கள் விக்கெட்டைக் காப்பாற்றுவதில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் ரோஹித்தால் நிலைத்து நிற்கமுடியவில்லை. 59 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த ரோஹித், ரபடாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில் இதுபோன்ற ஆடுகளங்களை எதிர்கொண்ட புஜாரா, தெ.ஆ. பந்துவீச்சாளர்களைத் திறமையாகக் கையாண்டார். துல்லியமான தடுப்பாட்டத்தால் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பார்த்துக்கொண்டார். ரோஹித்துக்குப் பிறகு வந்த அஸ்வின் முதலில் தடுமாறினாலும் பிறகு அவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தார்.
2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 36 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது. புஜாரா 26, அஸ்வின் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தென் ஆப்பிரிகாவின் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளார்கள். இன்றைய நாளின் முதல் பகுதியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்துள்ளது.