செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் 4-ஆவது சுற்றில் நடால்

DIN

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்று ஒன்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நடாலும், 28-ஆவது இடத்தில் இருந்த போஸ்னிய வீரர் டாமிஸ் ஜும்ஹுரும் மோதினர்.
ஒரு மணி 50 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த நடால், 6-1, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய நடால், 'மிக மிக கவனத்துடன் விளையாடினேன். அனைத்தும் சாதகமாக அமைவதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதேபோல், எதிர்வரும் ஆட்டமும் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்' என்றார். நடால் தனது அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸமேனை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 24-ஆவது இடத்தில் இருக்கும் அவர், 3-ஆவது சுற்றில் உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை வீழ்த்தியிருந்தார்.
இதேபோல், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதில் அவர் போட்டித் தரவரிசையில் 17-ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார். முன்னதாக கிர்ஜியோஸ் போட்டித் தரவரிசையில் 15-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் ஜோ வில்ஃபிரைடு சோங்காவை 7-6(7/5), 4-6, 7-6(8/6), 7-6(7/5) என்ற செட் கணக்கில் வென்றார்.
உலகின் 6-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், அமெரிக்காவின் ரயான் ஹாரிசனை வீழ்த்தினார். 4-ஆவது சுற்றில் அவருடன் மோதும் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா முன்னதாக லக்ஸம்பெர்க்கின் கில்லெஸ் முல்லரை வென்றார். இதர ஆட்டங்களில் பிரிட்டனின் கைல் எட்மன்டும், இத்தாலியின் ஆன்ட்ரே செபியும் வெற்றி பெற்றனர்.
போபண்ணா, திவிஜ் சரண் ஜோடிகள் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாùஸலின் ஜோடி 6-2, 7-6(7/3) என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் ஜாவ் செளசா-ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயர் இணையை வென்று 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல், இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ராஜீவ் ராம் இணை 4-6, 7-6(7/4), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ்-இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி ஜோடியை வீழ்த்தியது.
ஜெலினா தோல்வி
மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்று ஒன்றில் போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த லாத்வியாவின் ஜெலினா ஒஸ்டாபென்கோவை 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார் 32-ஆவது இடத்தில் இருக்கும் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட்.
இதர 3-ஆவது சுற்றுகளில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சை வீழ்த்தினார். 4-ஆம் நிலையில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான மார்த்தா கொஸ்டியுக்கை வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT