முகப்பு
செய்திகள்

பெரிய சிக்கலில் ரபாடா: விதிமுறைகளை மீறியதாக ஐசிசி நடுவர்கள் மீண்டும் புகார்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் 2-வது இன்னிங்ஸிலும் அவருடைய நடவடிக்கை குறித்து ஆட்ட நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். ஒரே டெஸ்டில் ரபாடா மீது இருமுறை நடுவர்கள் புகார்கள் அளித்துள்ளதால் அவர் பலத்த சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். 

முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை வீழ்த்திய ரபாடா, அடுத்தக் கணம் அவருடைய தோள்பட்டையில் இடித்தபடி ஓடினார். இதையடுத்து ஆட்ட நடுவர்கள் தர்மசேனா மற்றும் கஃபானே ஆகியோர் அவர் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் அளித்தார்கள். ஐசிசி இதை ஏற்றுக்கொண்டு விட்டால் ரபாடா எப்படியும் மூன்று அபராதப் புள்ளிகளைப் பெறுவார். இதையடுத்து 8 அபராதப் புள்ளிகளுடன் அவர் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் மீதமுள்ள இரு டெஸ்டுகளிலும் விளையாட முடியாமல் போகும் அபாயமும் உண்டு.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா அவர் அருகில் வந்து ஆக்ரோஷமாகக் கத்தினார். ஐசிசி விதிமுறைகளின்படி ஒரு பந்துவீச்சாளர் இதுபோன்ற செண்ட்ஆஃப் வழங்கக்கூடாது. இதனால் ரபாடா மீது நடுவர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளார்கள். ரபாடாவின் இந்த விதிமுறை மீறலுக்கு ஊதிய அபராதமும் இரண்டு அபராதப் புள்ளிகளும் வழங்கப்படலாம். 

ஸ்மித் தொடர்பான புகாரில் ரபாடாவுக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டால் இந்தத் தொடரில் மீதமுள்ள 2 டெஸ்டுகளில் ரபாடாவால் விளையாடமுடியும். 3 அபராதப் புள்ளிகள் பெற்றால் மட்டுமே அவர் தொடரை இழக்க நேரிடுவார். 2-வது டெஸ்ட் முடிந்தபிறகு ரபாடா தொடர்புடைய புகார்கள் குறித்து போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் முடிவெடுப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.