ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது...
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வதோதராவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
உடல்நலக் குறைவு காரணமாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ஹர்மன்ப்ரீத் கேப்டனாகக் களமிறங்கினார். மிதாலிக்குப் பதிலாக ஜெமிமா இந்தப் போட்டியில் அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய அணியின் அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணி 50 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் பூஜா 51 ரன்களும் சுஷ்மா வர்மா 41 ரன்களும் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஜெஸ் ஜோனாஸ்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிதான இந்த இலக்கை 2 விக்கெட் இழப்புக்கு 32.1 ஓவர்களில் அடைந்தது ஆஸ்திரேலிய அணி. தொடக்க வீராங்கனை போல்டன் சதமடித்து 100 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹீலி 38, லன்னிங் 33 ரன்கள் எடுத்தார்கள்.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் போட்டி, வியாழன் அன்று நடைபெறவுள்ளது.