முகப்பு
செய்திகள்

அசத்தும் 18 வயது வாஷிங்டன் சுந்தர்: 'பவர்பிளே ரகசியம்' சொல்கிறார்!

இந்தப் போட்டியில் 16 ஓவர்கள் வீசியதில் 11 ஓவர்கள் பவர்பிளே-யில் வீசப்பட்டதாகும்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:29 PM
பகிர்:

மூத்த வீரர்கள் ஓய்வெடுத்ததால் பல இளம் வீரர்களுக்கு முத்தரப்பு டி20 போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் தன்னிகரற்ற நட்சத்திரமாக உள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். 

நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பேட்டிங்கில் ரோஹித் சர்மா அசத்த, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் பலம் காட்டினார்.

இந்தியா - இலங்கை - வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் 18 வயது வாஷிங்டன் சுந்தர். 4 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள். அதேபோல குறைவான ரன்கள் கொடுத்த வீரர்களிலும் அவருக்கே முதலிடம். வாஷிங்டனின் எகானமி - 5.87. 

இதுவரை 1 ஒருநாள் போட்டியிலும் 5 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அனைத்திலும் ரோஹித் சர்மாவே கேப்டன். ஆனால் ஐபிஎல்-லில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ரூ. 3.30 கோடிக்கு வாஷிங்டனைத் தேர்வு செய்துள்ளது. 

வாஷிங்டனின் இன்னொரு சிறப்பு, பவர்பிளே பகுதியில் ஓவர்கள் வீசுவது. இதனால் கேப்டனின் சுமையை அவர் எளிதாக்குகிறார். இந்தப் போட்டியில் 16 ஓவர்கள் வீசியதில் 11 ஓவர்கள் பவர்பிளே-யில் வீசப்பட்டதாகும். 

இதுகுறித்து வாஷிங்டன் கூறியதாவது:

ஒரு பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க பேட்ஸ்மேன் முயல்வார். நானே ஒரு பேட்ஸ்மேனாகவும் உள்ளதால் என் பந்துவீச்சை ஒரு பேட்ஸ்மேன் எப்படி எதிர்கொள்ளப்போகிறார், ஷாட்டை எங்கு அடிக்கப் போகிறார் என்பதை யூகித்துக்கொள்வேன். பவர்பிளே-யில் விக்கெட் எடுக்கும் திறமைகளை நான் கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது. 

பவர்பிளே பகுதியில் பந்துவீசுவது சவாலானது. ஆனால் அதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளத்தானே கிரிக்கெட் விளையாடுகிறோம். சவால்களை வெற்றிகரமாக முடிக்கும்போது உங்களுக்கு நல்ல திருப்தி ஏற்படும். இந்தப் போட்டியில் பங்குபெற்றுள்ள மற்ற இரு அணிகளும் நன்றாக விளையாடக்கூடியவை. இறுதிப் போட்டியில் நாங்களே வெல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.