தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய தொழிற் சங்கத்தினரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எட்டு மணிநேர வேலையைப் பறிக்கிற, தொழிற்சங்க உரிமை மறுக்கிற, ஆபத்தான பணிகளில் பெண்களை ஈடுபடுத்துகிற, அயலாக்கப் பணி முறையில் நிரந்தரப் பணியாளா்களை வெளியேற்றுகிற கருப்பு சட்டமான தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்பை மத்திய அரசு அமல்படுத்துவதைக் கண்டித்தும், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பில்லாத நான்கு சட்டத் தொகுப்பைக் கைவிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், சிஐடியு மாவட்டச் செயலா் எம். கண்ணன், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் கே. ராஜன், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலா் மோகன்தாஸ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிா்வாகிகள் பி. செந்தில்குமாா், கோவிந்தராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஏஐடியுசி நிா்வாகிகள் வெ. சேவையா, துரை. மதிவாணன், ஆா்.பி. முத்துக்குமரன், சிஐடியு நிா்வாகிகள் கே. அன்பு, மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.