இந்தியன் சூப்பர் லீக்: சென்னை சாம்பியன்!
சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐஎஸ்எல் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது...
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் இன்று மோதின. இதில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஐஎஸ்எல் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது.
சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு, ஐஎஸ்எல் போட்டியில் தனது முதல் சீசனிலேயே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது மட்டுமல்லாமல் 9-வது நிமிடத்தில் முதல் கோலடித்து முன்னணி பெற்றது. சுனில் சேத்ரி இந்த கோலை அடித்து பெங்களூரு ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். ஆனால் 17 மற்றும் 45-வது நிமிடங்களில் சென்னை அணியின் மெயில்சன் ஆல்வ்ஸ் இரு கோல்கள் அடித்து சென்னை அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தார்.
ரஃபேல் அகஸ்டோ, 67-வது நிமிடத்தில் கோலடித்து சென்னை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் பெங்களூருவின் மிகு ஒரு கோலடித்தாலும் அதனால் சென்னையின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை. 3-2 என்கிற கோல் கணக்கில் இறுதி ஆட்டத்தை வென்று கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது சென்னையின் எஃப்சி.
இந்த சீசனில் புதிய பயிற்சியாளரான ஜான் கிரேகரியின் வழிகாட்டுதலிலும், ஜேஜே உள்ளிட்ட முக்கிய வீரர்களின் துணையாலும் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது.