மெளனம் கலைத்தார் முகமது ஷமியின் பாகிஸ்தான் தோழி: ஷமிக்கு ஆதரவாகப் பேட்டி!
இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் ஷமியைப் பின்தொடர்ந்தேன். அதன் மூலமாகத்தான் நான் அவருடைய நண்பரானேன்...
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவரிடம் இருந்து அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி பணம் பெற்றதாக அவரது மனைவி ஹசினின் செல்லிடப்பேசி பதிவு வெளியானது. இதையடுத்து, அந்தப் பணம் பெற்ற விவகாரம் குறித்து பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு உத்தரவிட்டது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியான நிலையில், முகமது ஷமியின் பெயர் அதில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷமியின் பாகிஸ்தான் தோழி அலிஷ்பா இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் ஷமியைப் பின்தொடர்ந்தேன். அதன் மூலமாகத்தான் நான் அவருடைய நண்பரானேன். அவருக்கு உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவர். நான் அவருக்கு மெசேஜ்கள் அனுப்பினேன். ஒரு மனிதராக ஷமியை எனக்கு மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்த வீரரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எந்தவொரு ரசிகரின் விருப்பமாக இருக்கும். அவர்மீது எனக்கு மரியாதை உண்டு.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு முதல்முறையாக அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதிலிருந்து எங்கள் உரையாடல் தொடர்ந்தது. நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். என் சகோதரி ஷார்ஜாவில் உள்ளார். அதனால் நான் துபையில் ஷமியைச் சந்தித்தேன். தென் ஆப்பிரிக்காவிலிருந்து அவர் துபை செல்வதாக அறிந்தேன். நானும் என் சகோதரியைச் சந்திக்க துபைக்குச் சென்றிருந்தேன். அப்படித்தான் நாங்கள் சந்தித்தோம்.
எனக்கு முகமது பாய் என்பவரைப் பற்றி தெரியாது. ஷமியுடன் ஹோட்டலிலும் தங்கவில்லை. நேராக என் சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அடுத்தநாள் காலை ஹோட்டலுக்குச் சென்று ஷமியுடன் இணைந்து காலை உணவை உண்டேன். எங்கள் இருவருக்குமிடையே எவ்விதப் பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை. யாரிடமும் பொய் சொல்லாத ஒரு நபர் எப்படி நாட்டை ஏமாற்றுவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.