செய்திகள்

வாழ்நாள் தடையை எதிர்கொள்ளப் போகிறார்களா ஸ்மித் & வார்னர்? கிரிக்கெட் உலகில் பரபரப்பு!

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, பதவி விலக நெருக்கடி அளிக்கப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகினர். இதையடுத்து 3-வது டெஸ்டில் எஞ்சிய நாள்களில் ஆஸ்திரேலிய அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக பொறுப்பேற்றார். 

தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இதில் 3-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற பொருள் ஒன்றை வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயன்றார். இதை, மைதானத்தில் இருந்த தொலைக்காட்சி ஒளிரப்பு கேமரா ஒன்று படம் பிடிக்க, அது மைதானத்தின் பெரிய திரையிலும் தெரிந்தது. அதைக் கண்டு தடுமாறிய பேன்கிராஃப்ட், அந்தப் பொருளை தனது கால்சட்டையில் மறைத்து வைத்தார். இதையடுத்து பந்து சேதப்படுத்தப்பட்டதாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நடுவரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முன்பாக பேன்கிராஃப்டிடம் அவரது செயல் குறித்து கேள்வி எழுப்பினர். பின்னர் பந்தை பரிசோதித்த அவர்கள் அதே பந்தை தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தனர்.

3-ஆம் நாள் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பந்து சேதப்படுத்தப்பட்டதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக் கொண்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து அணியின் முக்கிய வீரர்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. கேப்டன் ஸ்மித்துக்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அந்த அணிக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களின் செயல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கும் வகையில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்மித்தைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசு தரப்பில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு ஸ்மித் மற்றும் வார்னருக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்புடைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாட இயலாது. மேலும், அவருக்கான போட்டி ஊதியம் 100 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனிடையே, பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்டுக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேன்கிராஃப்டின் தரவரிசை புள்ளிகளில் 3 குறைக்கப்பட்டன.

விசாரணையை மேற்பார்வையிட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட், தென் ஆப்பிரிகாவுக்குச் செல்லவுள்ளார். விசாரணை குறித்த தகவல்களை புதன் அன்று வெளியிடுவார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கிரிக்கெட் விதிமுறைகளை மீறியதோடு மட்டுமல்லாமல் அதற்குத் திட்டமும் வகுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு அவமானத்தைத் தந்துள்ள ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவுகளைக் கொண்டு ஆணையர் ஒருவர் தண்டனைக்கான விவரங்களை வெளியிடுவார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விதிமுறைகளின்படி, வாழ்நாள் தண்டனை வரை தீர்ப்பு வழங்கவும் வாய்ப்புண்டு. 

இதுதொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு இவ்வளவு கடுமையான தண்டனையை விதிக்கக்கூடாது என்கிற ஆதரவுக்குரல்கள் எழுந்துள்ளன. மேட்ச்ஃபிக்ஸிங் செய்த வீரர்களுக்கே 5 வருடம்தான் தண்டனை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்குக் கடுமையான தண்டனை விதிப்பது சரியாக இருக்காது, அதற்குப் பதிலாகத் தலைமைப் பொறுப்பை ஸ்மித்திடமிருந்து பறிக்க வேண்டும் என்கிற கருத்துகள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிபுணர்கள் ஆகியோரிடமிருந்து வெளிப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT