என்ன நடக்கும் கடைசி டெஸ்டில்?: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி வருகிறது...
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றிகள் வசமாயின.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட் ஆட்டம் முடிவடைந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி விடுவேன் என்று கலங்கிய கண்களுடன் டேரன் லேமன் நேற்று தெரிவித்தார். இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று லேமனுக்கு மரியாதை அளிக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். அதேசமயம் இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 3-1 என கைப்பற்ற வேண்டிய உற்சாகத்தில் உள்ளார்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள். இதனால் இந்த டெஸ்ட் போட்டியின் முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த டெஸ்டில் கேப்டனாகச் செயல்படும் டிம் பெயின், ஆஸ்திரேலியாவின் 46-வது டெஸ்ட் கேப்டனாகியுள்ளார். ஜோ பர்ன்ஸ், மேட் ரென்ஷா தொடக்க வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஸ்மித்துக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காயமடைந்துள்ள ஸ்டார்க்குக்குப் பதிலாக சட் சயேர்ஸ் தேர்வாகியுள்ளார். இந்த டெஸ்டுடன் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்கல் ஓய்வு பெறுகிறார்.
கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தின்போது சொரசொரப்பு தன்மைகொண்ட ஒரு பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்த பான்கிராஃப்ட் முயன்றது கேமராவில் பதிவாகி மைதானத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிபரப்பானது. இதையடுத்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாத காலமும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.