முகப்பு
செய்திகள்

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி 2018: மீண்டும் வரலாறு படைப்பாரா மேரி கோம்?

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் (2018) 6-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை படைப்பாரா இந்திய வீராங்கனை மேரி கோம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் (2018) 6-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை படைப்பாரா இந்திய வீராங்கனை மேரி கோம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் (ஏஐபிஏ) சார்பில் 10-ஆவது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகள் தில்லியில் நவம்பர் 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னாள் சாம்பியன்கள், ஒலிம்பியன்கள் களமிறங்கி போட்டிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பர் எனத் தெரிகிறது.
குறிப்பாக ஃபெதர்வெயிட் பிரிவில் கடந்த 2016-இல் முறை பட்டம் வென்ற இத்தாலியின் அலெஸியா மெஸியானோ, வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஸி வீராங்கனை கேயே ஸ்காட், தாய்லாந்து பீம்விலாய் லவபியம், ரஷியாவின் அனஸ்டஸிலா பெலியகோவா ஆகியோர் அடங்குவர்.
10 எடைப் பிரிவுகளில் 70 நாடுகளில் இருந்து 300-க்கு மேற்பட்ட குத்துச்சண்டை வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உக்ரைன், ஜெர்மனி, தாய்லாந்து, இங்கிலாந்து, பல்கேரியா போன்றவற்றில் தலைசிறந்த வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
மேக்னிபிஷியன்ட் மேரி கோம்: 
இந்தியாவின் மூத்த குத்துச்சண்டை வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேக்னிபிஷியன்ட் மேரி எனப்படும் மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் களமிறங்குகிறார். அவரது தலைமையில் பலமான இந்திய அணியும் போட்டியில் பங்கேற்கிறது. 
ஆசிய போட்டியில் தங்கமும், ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்ற மேரி கோம், தற்போது 6-ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.
இந்திய அணி விவரம்:
மேரி கோம் (48 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ), மணிஷா மவுன் (54 கிலோ), சோனியா லெதர் (57 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), சிம்ரஞ்சித் கெளர் (64 கிலோ), லவ்லினா போரோகெயின் (69 கிலோ), ஸ்வட்டி பூரா (75 கிலோ), பாக்யபதி கச்சாரி (81 கிலோ), சீமா புனியா (81 கிலோ கூடுதல்).
பயிற்சியாளர்கள்: ரபேல் பெர்காம்ஸ்கோ, ஷிவ் சிங், சந்தியா குருங், அலி குமர், சோட்டே லால் யாதவ், சத்வீர் கெளர்.
மேரி கோம்:
மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடின உழைப்பால் இந்நிலையை அடைந்துள்ள மேரி 2002, 2005, 2006,2008, 2010 உலக சாம்பியன் போட்டிகளில் தங்கம் வென்றார். 2001-இல் வெள்ளிவென்றார். ஆசியப் போட்டியில் தங்கம், வெண்கலம், 2012 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். முன்பு 51, 46 கிலோ பிரிவுகளில் போட்டியிட்ட மேரி தற்போது 48 கிலோ எடைப்பிபிரிவில் மட்டுமே பங்கேற்கிறார். சொந்த மண்ணில் ரசிகர்கள் முனனிலையில் மீண்டும் இரண்டாவது முறை தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.
35 வயதான மேரி கோம் ஒலிம்பிக் பதக்க வீரர், நாடாளுமன்றவாதி, இரட்டைக் குழந்தைகளின் தாய், குத்துச்சண்டையின் அடையாளமாகவும் உள்ளார்.
பிங்கி ஜங்கரா: ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பிங்கி ராணி ஜங்ரா 2014 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். பின்னர் 2015-இல் நடந்த பிரசிடெண்ட் கோப்பையில் தங்கம் வென்றார். 
மணிஷா மவுன்: இவரும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆசிய யூத் சாம்பியன் பட்டம் வென்ற 20 வயதான மணிஷா முதன்முறையாக உலக சாம்பியன் போட்டியில் மோதுகிறார்.
சோனியா லேதர்: பெதர்வெயிட் பிரிவில் களமிறங்கும் சோனியா லேதர் கடந்த 2016 உலக சாம்பியன் போட்டியில் வெள்ளியும், ஆசிய அமெச்சூர் போட்டியில் 2 முறை வெள்ளியும் வென்றார்.
சரிதா தேவி: மணிப்பூரைச் சேர்ந்த சரிதாதேவி தேசிய சாம்பியன், தில்லியில் 2006 உலக சாம்பியன் போட்டி லைட்வெயிட் பிரிவில் தங்கம் வென்றார். 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றார். 
சிம்ரஞ்சித் கெளர்: பஞ்சாப்பைச் சேர்ந்த சிம்ரஞ்சித் கெளர் யூத் உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்றார். மேலும் இஸ்தான்புல்லில் நடந்த அஹமது கொமர்ட் போட்டியிலும் தங்கம் வென்றார்.
லவ்லினா போரோகெயின்:  அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியைச் சேர்ந்த லவ்லினா போரோகெயின் இந்திய ஓபனில் தங்கம், உலன்பட்டார் கோப்பையில் வெண்கலம் வென்றுள்ளார். ஆசிய மகளிர் போட்டியில் வெண்கலம், வென்றார்.
ஸ்வீட்டி பூரா: ஹரியாணா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த ஸ்வீட்டி கடந்த 2014 உலகக் கோப்பையில் வெள்ளி வென்றார். 2015 ஆசிய சாம்பியன் போட்டியில் வெள்ளியும், வென்றுள்ளார். உலகின் 2-ஆம் நிலை வீரராகவும் திகழ்ந்தார்.
பாக்யபதி கச்சாரி: போடோலாந்தைச் சேர்ந்த பாக்யபதி கசசாரி இஸ்தான்புல் அஹமது கோமர்ட் போட்டியில் வெண்கலம் வென்றார். 
சீமா புனியா: ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவைச் சேர்ந்த சீமா புனியா குத்துச்சண்டையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கடந்த ஆசிய மகளிர்போட்டியில் வெண்கலப்பதக்கம்வென்றார். 
இதுதொடர்பாக மேரி கோம் கூறியதாவது:
கடந்த 2006-இல் உள்ளூர் ரசிகர்கள் முன்பு உலக போட்டியில் தங்கம் வென்றேன். நீண்ட நாள் கழித்து 48 கிலோ பிரிவில் மோதுவது கூடுதல் பலம். மீண்டும் 6-ஆவது தங்கத்தை வென்று நாட்டுக்கு அர்ப்பணிக்க கடுமையாக போராடுவேன். ஒரு நாள் பயிற்சியைக் கூட நான் தவற விட விரும்பவில்லை. தொடர்ந்து எதிராளிகளின் ஆட்டத்தை அறிந்து வருகின்றேன். தற்போது போட்டி கடுமையாக உள்ளதால்,  நுண்ணறிவை பயன்படுத்தி எதிராளியை தாக்க வேண்டும், பயிற்சியாளர்கள் கூறுவதை பின்பற்றுகிறேன். இளம் வீராங்கனைகள் என்னை அணுகினால் உரிய ஆலோசனை வழங்கத் தயார் என்றார். சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் முதல் பெண் வெற்றியாளர் விருதை மேரி பெற்றுள்ளார்.
பலம் வாய்ந்த வீராங்கனைகள் கொண்ட அணி இந்தியா சார்பில் பங்கேற்பதால் இந்தியா அதிக பதக்கஙகள் வெல்லும் என எதிர்பார்ப்பு  எழுநதுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.