மே.இ. தொடருக்கு கெதர் ஜாதவ் தேர்வாகாதது ஏன்?: புதிய சர்ச்சைக்குத் தேர்வுக்குழுத் தலைவர் பதில்!
அவருடைய உடற்தகுதியை ஆராய்ந்து, நான்காம் ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பு கூடுதல் வீரராக அவரைச் சேர்க்கலாம் என...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில், கடைசி 3 ஆட்டங்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். உள்நாட்டுப் போட்டியான தியோதர் கோப்பை கிரிக்கெட்டில் நன்றாக ஆடியும், கேதர் ஜாதவுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் மே.இ. ஒருநாள் தொடருக்குத் தான் தேர்வாகாதது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் ஜாதவ். நான் எதனால் தேர்வாகவில்லை என்று பார்க்க வேண்டும் என்று அதிருப்தியுடன் பதில் அளித்தார். இதனால் உண்டான சர்ச்சையை அடுத்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
உடற்தகுதி குறித்த அவருடைய பழைய சம்பவங்கள் காரணமாக இம்முறை அவரைத் தேர்வு செய்யவில்லை. உடற்தகுதி சரியானதாக அவர் அணிக்குள் வந்தாலும் பிறகு காயமடைந்து வெளியேறியுள்ளார். ஆசியக் கோப்பைப் போட்டியில் அவருக்கு அப்படித்தான் ஆனது. நேற்றைய ஆட்டத்தில் இந்தியா ஏ வென்றிருந்தால் ஜாதவுக்கு இன்னொரு ஆட்டத்தில் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கும். அதன்மூலம் அவருடைய உடற்தகுதியை ஆராய்ந்து, நான்காம் ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பு கூடுதல் வீரராக அவரைச் சேர்க்கலாம் என இருந்தோம். இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை வீரர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.
Advertisement
ஒருநாள் அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அம்பட்டி ராயுடு, ரிஷப் பந்த், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே.