வங்கதேசம், ஆப்கனின் எழுச்சி: சாம்பியன்களுக்கு எச்சரிக்கை...
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளின் எழுச்சி பெரிய கிரிக்கெட் அணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி போல் அமைந்துள்ளது.
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளின் எழுச்சி பெரிய கிரிக்கெட் அணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி போல் அமைந்துள்ளது.
கிரிக்கெட் என்றாலே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போன்ற நாடுகள் தான் அனைவரது நினைவுக்கு வரும். அதற்கேற்ப அனைத்து வகையான உலகக் கோப்பை போட்டிகளிலும் மேற்கண்ட நாடுகளே சாம்பியன் பட்டத்தை மாறி மாறி வென்றுள்ளன.கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஐசிசி புதிய அணிகளை உறுப்பினர்களாக சேர்த்துள்ளது. அவற்றுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆட்டங்கள் அந்தஸ்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அயர்லாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான் போன்றவை புதிதாக இணைந்துள்ளன.இதில் வங்கதேச அணி ஏற்கெனவே பல்வேறு அணிகளுடன் விளையாடி வருகிறது. குறிப்பாக ஒருநாள், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அவற்றில் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியமும் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. குறிப்பாக அதன் முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தியாவுடன் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
அந்த அணி வீரர்கள் ரஷித் கான், கேப்டன் அஷ்கர் ஆப்கன், மமுத்துல்லா, உள்ளிட்ட வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போதைய ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கன் அணி துடிப்புடன் ஆடி வருகிறது. துவக்க சுறறில் இலங்கை, வங்கதேசத்தை வென்ற ஆப்கன், சூப்பர் ஃபோர் பிரிவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று பந்துகள் மட்டுமே இருந்த நிலையில் தோற்றது. மேலும் வங்கதேசத்திடமும் கடும் போராட்டத்துக்கு பின் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் நடைபெற்ற ஆட்டம் ஆப்கன் அணியின் மேம்பட்ட ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. முதலில் ஆடிய ஆப்கன் அணியின் மொகமது ஷஸாத் தனி ஆளாக நின்று இந்திய பந்துவீச்சை சிதறடித்து 124 ரன்களை எடுத்தார். 252/8 ரன்களை குவித்தது ஆப்கன்.
அதே நேரத்தில் இந்திய அணியால் எளிதான அந்த ஸ்கோரை எட்ட முடியாமல் கடைசி ஓவர் வரை ஆடிக் கொண்டிருந்தனர். சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் அபார பந்துவீச்சால் ஆட்டம் டையில் (சமனில் முடிந்தது). இதனால் நூலிழையில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஆப்கன் தவறவிட்டது.
இதுதொடர்பாக கேப்டன் அஷ்கர் கூறுகையில்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனுபவமின்மையால் நாங்கள் ஆட்டத்தை சமன் செய்ய நேரிட்டது. இந்த போட்டியில் பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டோம். ஓராண்டுக்கு முன்பு ஒருநாள் ஆட்ட அந்தஸ்துக்கு ஏற்ப தற்போது எங்கள் அணி வலிமை பெற்றுள்ளது. துபையில் இந்தியாவுடன் ஆட்டம் நடைபெற்றிருந்தால் நாங்கள் கண்டிப்பாக இறுதிக்கு தகுதி பெற்றிருப்போம். அபுதாபி மைதானம் எங்கள் பந்துவீச்சுக்கு ஏற்றதாக இல்லை. இதில் எங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. அடுத்து வரும் ஆட்டங்கள் எங்கள் அணி வீரர்கள் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்றார்.
வங்கதேசம்
அதே நேரத்தில் வங்கதேச அணி கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வுடன் ஆடி வருகிறது. சில ஆட்டங்களில் பெரிய அணிகளான இங்கிலாந்து, இந்தியா, ஆஸி, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்துள்ளது. தற்போதைய ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச அணியும் முன்னணி அணிகளை நிலைகுலையச்செய்துள்ளது.
இலங்கை அணி போட்டியில் இருந்தே வெளியேற காரணமாக வங்கேதசம் அமைந்தது. ஆப்கானிஸ்தானை போராடி வென்ற அந்த அணி, இந்தியாவுடன் மட்டுமே படுதோல்வியை சந்தித்து.
பாகிஸ்தானுடன் நடைபெற்ற சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் முஷ்பிகுர், மிதுன், முஸ்தபிஸுர், மொர்டஸா, உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இறுதிச் சுற்றில் இந்தியாவும்-வங்கதேசமும் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளின் எழுச்சி மற்ற பெரிய அணிகளுக்கு வருங்காலத்தில் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.