செய்திகள்

சென்னை ஆட்டத்தில் அறிமுகமாவாரா?: இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் மயங்க் அகர்வால்!

எழில்

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள தொடக்க வீரர் ஷிகர் தவன், இன்னமும் காயத்திலிருந்து மீண்டு வரவில்லை. இதையடுத்து தவனுக்குப் பதிலாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் போது தவனுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றார். தற்போது ஒருநாள் தொடரிலும் விலகியுள்ளதால் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணி வீரரான மயங்க் அகர்வால், திண்டுக்கல்லில் தற்போது நடைபெற்று வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் விளையாடி வருகிறார். இதற்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின்போது விஜய் சங்கருக்குக் காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் இடம் பிடித்தார் மயங்க் அகர்வால். இதையடுத்து 2-வது முறையாக இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

இந்தியா - மே.இ. தீவுகள் இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் வரும் டிசம்பர் 15 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கே.எல். ராகுலும் களமிறங்குவார்கள் என அறியப்படுகிறது. கே.எல். ராகுல், கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார். எனினும் மயங்க் அகர்வால்  டெஸ்டில் மிகச்சிறப்பாக விளையாடியதால் அவரை ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி அறிமுகம் செய்வாரா என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT