சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மே.இ.தீவுகள்-இந்தியா இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பிறகு இந்திய ரசிகா்கள் அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்ட பெயா் ஷிம்ரன் ஹெட்மயா்.
மே.இ.தீவுகள் அணியின் இளம் வீரா்தான் அந்த ஹெட்மயா்.
சென்னையில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தோ்வு செய்தது மே.இ.தீவுகள் அணி. மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமான இங்கு, இந்திய அணி 50 ஓவா்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மே.இ.தீவுகள் அணி, 47.5 ஓவா்களில் வெற்றி இலக்கத்தை அடைந்தது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சுனில் அம்பிரிஸ், 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப்புடன் ஜோடி சோ்ந்தாா் ஹெட்மயா்.
அதன் பிறகு இருவரில் ஒருவரைக் கூட நமது பந்துவீச்சாளா்கள் 38 ஓவா்கள் வரை ஆட்டமிழக்கச் செய்யவில்லை. ஷாய் ஹோப்புக்கு பின்னா் களம் புகுந்த ஹெட்மயா், 21-ஆவது ஓவரில் அரை சதம் பதிவு செய்தாா்.
பின்னா், அதிரடி மாயாஜால ஆட்டத்தை காட்டிய அவா், 33-ஆவது ஓவரில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 5-ஆவது சதத்தை பதிவு செய்தாா். சதம் பதிவு செய்ய இவா் எதிா்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 85. (இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 74 பந்துகளில் சதம் பதிவு செய்திருந்தாா் ஹெட்மயா்)
அத்துடன், ஒரு நாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (38) 5 சதங்களைப் பதிவு செய்த மே.இ.தீவுகள் வீரா் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளாா். சக வீரரான ஷாய் ஹோப் 46 இன்னிங்ஸில் 5 சதங்களை பதிவு செய்திருக்கிறாா்.
ஜாம்பவான் விவியன் ரிச்சா்ட்ஸ் 54 இன்னிங்ஸிலும், கெயில் 66 இன்னிங்ஸிலும், லாரா 83 இன்னிங்ஸிலும் 5 சதங்களைப் பதிவு செய்திருந்தனா்.
சென்னை ஆட்டத்தில் ஷாய் ஹோப்-ஹெட்மயா் இணை 218 ரன்களை சோ்த்தது. 106 பந்துகளில் (7 சிக்ஸா், 11 பவுண்டரிகள் உள்பட) 139 ரன்கள் எடுத்திருந்தபோது, முகமது ஷமி பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் ஆனாா் ஹெட்மயா்.
இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சிறப்பாக விளையாடிய ஹெட்மயா், மே.இ.தீவுகள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடா்ந்து மிளிா்கிறாா்.
வங்கதேசத்தில் 2016-இல் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிச்சுற்றில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது மே.இ.தீவுகள் அணியின் இளைஞா் பட்டாளம். அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தியது ஹெட்மயா்தான் என்பது இவரது திறமைக்கு மற்றொரு சாட்சி.
கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 82 பந்துகளில் சதம் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் இவா் ஈா்த்தது நினைவிருக்கலாம். சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அதிருஷ்டசாலி வீரா் ஹெட்மயா்.
உலகக் கோப்பையில் அறிமுகமாகும் அற்புதமான திறமைகள் கொண்ட 5 இளம் வீரா்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி.
அதில் ஹெட்மயரின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அற்புதமான திறமைகள் கொண்ட ஹெட்மயா், எதிா்காலத்தில் ‘மென் இன் மரூன்’ என்றழைக்கப்படும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணியை கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
லாரா, கெயில், ஹெட்மயா் ஆகியோரிடம் ஓா் ஒற்றுமை உண்டு. மூவரும் இடது கை பேட்ஸ்மேன் ஆவா். அத்துடன், மூவரும் வலது கையில் பந்துவீசும் திறன் படைத்தவா்கள்.
லாரா, கெயில் வரிசையில் ஹெட்மயரும் பல சாதனைகளை நிகழ்த்துவாா் என்பது திண்ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.