ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே, பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுத் தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. 2-ம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை தொடக்க வீரர், திமுத் கருணாரத்னே 46 ரன்கள் எடுத்து நன்கு விளையாடி வந்தார். அந்த நிலையில், 31-வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து கருணாரத்னேவின் பின்கழுத்தைப் பதம் பார்த்தது. இதனால் உடனடியாக பேட்டைக் கீழே போட்டு நிலைதடுமாறி விழுந்தார் கருணாரத்னே. உடனடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு உதவி செய்ய முயன்றார்கள். இலங்கை அணியின் பிஸியோவும் ஆஸி. அணியின் மருத்துவரும் ஆடுகளத்துக்கு விரைந்தார்கள். பவுன்சர் பந்தினால் பலமாகத் தாக்கப்பட்டபோதும் மயக்கமடையாமல் சுயநினைவுடன் வீரர்களிடமும் மருத்துவரிடமும் உரையாடினார் கருணாரத்னே. இதையடுத்து ஸ்டெரெச்சர் மூலமாக ஆடுகளத்தை விட்டு உடனடியாக அவர் வெளியேறினார். பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் நல்ல நிலைமையில் உள்ளார். ஆபத்து எதுவுமில்லை. எங்களிடம் நன்குப் பேசினார் என இலங்கைப் பயிற்சியாளர் ஹதுருசின்ஹா கூறியுள்ளார்.
கருணாரத்னே, தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். நாளை பேட்டிங் செய்வது குறித்து இனிமேல்தான் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.