உலகின் 2-வது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னை வீரர்: பிரக்ஞானந்தாவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளினார்!
17-வது தில்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், கிராண்மாஸ்டருக்கான 3-வது தகுதியை அடைந்து கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் குகேஷ்...
இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர், உலகின் 2-வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார், சென்னையைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் குகேஷ்.
17-வது தில்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், கிராண்மாஸ்டருக்கான 3-வது தகுதியை அடைந்து கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் குகேஷ். இதன்மூலம் இந்தியாவின் 59-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைத் தகர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியாமல் போனது. 12 வயது 10 மாதம், 13 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். எனினும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். இந்நிலையில் 12 வயது ஏழு மாதம் 17 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி, பிரக்ஞானந்தாவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் குகேஷ். இது, கர்ஜாகின்-னை விடவும் 17 நாள்கள் மட்டுமே அதிகம்.
கடந்த மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் கர்ஜாகின்-னின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டார் குகேஷ். எனினும் அதற்குப் பிறகு நீண்டநாள் காத்திருக்காமல் உடனடியாக செஸ் கிராண்ட் மாஸ்டராகி சாதனையும் படைத்துள்ளார்.