பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்: ஆஸி. அணியில் ஸ்மித், வார்னருக்கு இடமில்லை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மித், வார்னர் ஆகியோர் இடம்பெறவில்லை.
மார்ச் 28 உடன் இருவர் மீதான இடைக்காலத்தடை முடிவடைவதால், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெற்று அதன்பிறகு உலகக் கோப்பை அணியிலும் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
இருவரும் காயத்திலிருந்து தற்போது மீண்டு வருகிறார்கள். எனவே அடுத்ததாக அவர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார்கள். அவர்களுடைய பங்களிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூர்ந்து கவனிக்கும் என்று தேர்வுக்குழுத் தலைவர் டிரெவர் ஹான்ஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற வீரர்களில் வேகப்பந்துவீச்சாளரும் ஸ்டார்க்கும் இடம்பெறவில்லை. இதுகுறித்து ஹான்ஸ் கூறியதாவது: அவரும் காயத்திலிருந்து மீண்டு தற்போதுதான் பந்துவீச முயல்கிறார். அவர் உலகக் கோப்பைக்குத் தயாராவதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 22 அன்று ஷார்ஜாவில் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி, ஜேஸன் பெஹ்ரண்டார்ஃப், நாதன் கோல்டர் நைல், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கிளென் மாக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா.