ராஞ்சியில் சிக்ஸர் மழை. 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா சி அணி. கூடவே 12 சிக்ஸர்கள்.
இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா சி அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஷுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலும் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் 44 ரன்கள் கிடைத்தன. மயங்க் 48 பந்துகளிலும் ஷுப்மன் கில் 74 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள். அஸ்வின் உள்ளிட்ட இந்தியா ஏ பந்துவீச்சாளர்களை இருவரும் சுலபமாகக் கையாண்டார்கள். 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 140 ரன்கள் கிடைத்தன. 35-வது ஓவரில் மயங்க் - ஷுப்மன் கூட்டணி 200 ரன்களை எட்டியது. 96 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால் பிறகு 120 ரன்களில் விஹாரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக, 123 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில். பிகே கர்க், 16 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடித்த பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷுப்மன் கில். சிக்ஸர் மழை பொழிந்தார். பிறகு, அஸ்வின் பந்துவீச்சில் 143 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவரை நிதானமாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவ், கடைசி 3 ஓவர்களில் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். முதல் 15 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், கடைசி 14 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்தியா சி அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 61 ரன்கள் கிடைத்தன. 48-வது ஓவரில் 16 ரன்களும் 49-வது ஓவரில் 22 ரன்களும் 50-வது ஓவரில் 23 ரன்களும் கிடைத்தன. கடைசி 3 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், 4 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடித்தார்.
இந்தியா சி அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ அணியின் உனாட்கட் 10 ஓவர்களில் 82 ரன்களும் கெளல் 8 ஓவர்களில் 66 ரன்களும் கொடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.