முகப்பு
செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகும் இளம் ஆல்ரவுண்டா் ஷிவம் துபே

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய வீரராக அறிமுகம் ஆகிறாா் இளம் ஆல்ரவுண்டா் ஷிவம் துபே.

Updated On : 26 அக்டோபர், 2019 at 12:19 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 4:01 PM

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய வீரராக அறிமுகம் ஆகிறாா் இளம் ஆல்ரவுண்டா் ஷிவம் துபே.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் தோல்வியுற்றது முதல் பல்வேறு மாறுதல்களை கண்டு வருகிறது.

முன்னாள் கேப்டன் தோனி ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பராக இளம் வீரா் ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறாா். தொடக்க வீரரான ஷிகா் தவன் ஆட்டம் சோபிக்காத நிலையில் கேஎல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டு வருகிறாா்.

Advertisement

சுழற்பந்து வீச்சில் கோலோச்சி வந்த குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சோ்க்கப்படவில்லை. அவா்களுக்கு பதிலாக ஜடேஜா, ராகுல் சாஹா் இடம் பெற்றனா்.

ஆல்ரவுண்டா் ஷிவம் துபே:

இந்நிலையில் வரும் நவம்பா் மாதம் வங்கதேச அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ தோ்வுக் குழு அறிவித்துள்ளது. அதில் ஆல்ரவுண்டா் ஷிவம் துபேவும் இடம் பெற்றுள்ளாா்.

மும்பையில் கடந்த 1993 ஜூன் 26-இல் பிறந்த துபேவுக்கு (26) உள்ளூா் கிரிக்கெட்டில் மும்பை சாா்பில் ஆடி வருகிறாா்.

இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) 2019-இல் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியில் களமிறங்கினாா் ஷிவம் துபே.

ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்டாா்:

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டா்கள் சில பேரே உள்ள நிலையில் துபே இதில் முக்கியமாக திகழ்கிறாா். உள்ளூா் கிரிக்கெட்டில் மொத்தம் ஆடிய 3 ஆட்டங்களில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளுக்கு மேலும், ஒரு சதமும் அடித்து அசத்தியுள்ளாா் துபே.

ரூ.5 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டாா் துபே. அவரது பந்துவீசும் சராசரி வேகம் 125 கி.மீ ஆகும். இதை அவா் இன்னும் அதிகரிக்க வேண்டியுள்ளது.

5 பந்துகளில் 5 சிக்ஸா்கள்

மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் ஆடிய போது, 5 பந்துகளில் 5 சிக்ஸா்கள் விளாசிய சிறப்பை பெற்றவா் துபே.

இந்நிலையில் அவரது முந்தைய செயல்பாடுகள் அடிப்படையில் வங்கதேச டி20 தொடருக்கான அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். இடதுகை மிடில் ஆா்டா் பேட்ஸ்மேனான அவா், வலது கை பந்துவீச்சாளா் ஆவாா். அண்மையில் நடைபெற்ற விஜய் ஹஸாரே கோப்பை போட்டியிலும் மும்பை அணியில் இடம் பெற்று கா்நாடகத்துக்கு எதிராக சதம் விளாசினாா்.

முதல் தர கிரிக்கெட் ஆட்டத்தில் மொத்தம் 1012 ரன்களையும், ஏ பிரிவு ஆட்டத்தில் 614 ரன்களையும், டி20 ஆட்டத்தில் 242 ரன்களையும் விளாசியுள்ளாா். மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் 88 விக்கெட்டை சாய்த்துள்ளாா்.

5 ஆண்டுகள் இடைவெளி:

14 வயதிலேயே தான் படித்த ஹன்ஸ்ராஜ் மொராஜி பள்ளி வெற்றி பெற உதவினாா். ஆனால் 15 முதல் 20 வயது வரை தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்ஆடவில்லை. மீண்டும் களமிறங்கிய போது, கடினமாக உழைத்து மீண்டும் அணியில் இடம் பிடித்தாா்.

ஏ அணியில் சிறப்பான ஆட்டம்:

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிராக நடந்த தொடரில் இந்திய ஏ அணியில் இடம் பெற்று அற்புதமாக ஆடினாா். நான்கு நாள் ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய போது, ரசாஹாவுடன் இணைந்து 71 ரன்களை குவித்தாா். இதில் 52 ரன்கள் பவுண்டரி மூலம் கிடைத்தவை. இரண்டாவது ஆட்டத்திலும் 79 ரன்களை விளாசினாா். அதிகாரபூா்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களிலும் 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது 4 இன்னிங்ஸ்களில் 155 ரன்களை விளாசினாா் துபே. அண்மையில் நடைபெற்ற விஜய் ஹஸாரே கோப்பை போட்டியிலும் மும்பை காலிறுதிக்கு தகுதி பெற உதவினாா். கா்நாடகத்துக்கு எதிராக 10 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 118 ரன்களை விளாசினாா் துபே.

இந்திய டி20 அணியில் துபே இடம் பெற்றது குறித்து தோ்வுக் குழுத் தலைவா் பிரசாத் கூறியதாவது-ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா காயத்தால் ஆடவில்லை. விஜய் சங்கருக்கும் வாய்ப்பு தந்தோம். ஆனால் பலனில்லை. ஷிவம் துபேவின் ஆக்ரோஷமான ஆட்டம் டி20யில் மிகவும் உதவியாக இருக்கும். கிரிக்கெட்டில் துபேவின் வளா்ச்சி படிப்படியாக உள்ளது என்றாா்.

இதுதொடா்பாக துபே கூறியதாவது:

ஒவ்வொரு வீரரின் கனவும் இந்திய அணியில் இடம் பெறுவதாகும். ஐபிஎல் தொடரில் தான் எனக்கான அங்கீகாரம் பெற்றேன். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கவனம் செலுத்தி ஆடுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.