திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணியை தென் ஆப்பிரிக்க ஏ அணி வீழ்த்தியது.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. ஹெண்ட்ரிக்ஸ் 60 ரன்கள் எடுத்தார். பிறகு விளையாடிய இந்திய ஏ அணிக்கு டிஎல் முறையில் 25 ஓவர்களில் 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 7.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, தவன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்றும் மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. தவன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலக்கை நெருங்க நெருங்க இந்திய பேட்ஸ்மேன்கள் பதற்றம் அடைந்தார்கள். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு நிறைய விக்கெட்டுகள் கிடைத்தன. கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றியடைந்தது. இந்திய அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. தெ.ஆ. ஏ அணித் தரப்பில் நார்ட்ஜே, ஜான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய ஏ அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது. 5-வது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.