செய்திகள்

வெள்ளி நாயகனான விவசாயி மகன்!

இதற்கு முன்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில்  இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மணிகண்டன் தியாகராஜன்


இதற்கு முன்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில்  இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒரு முறை, இரு முறை அல்ல; ஆறு முறை உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளார்.
ஆடவர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீரர் ஒருவர் சென்றது இதுவே முதல் முறை. அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் அமித் பங்கால். தங்கம் வென்றிருந்தால் இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் அழிக்க முடியாத பெயராக அமித்தின் பெயர் இடம்பெற்றிருக்கும்.
வெற்றியும், தோல்வியும் வீரருக்கு சகஜம்தான் என்பதால் தங்க மகன் என்றழைக்கப்பட வேண்டியவரை வெள்ளி நாயகனாகக் கொண்டாடுவோம்.
யார் இந்த அமித் பங்கால்?
ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தில் மய்னா என்ற கிராமத்தில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிறந்தார் அமித் பங்கால். தந்தை விஜேந்தர் சிங் பங்கால், விவசாயி.
இவரது மூத்த சகோதரர் அஜய் பங்காலும் குத்துச்சண்டை வீரர்தான். இவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுதான் அமித்தும் குத்துச்சண்டை ரிங்குக்குள் அடியெடுத்து வைத்தார்.
2008ஆம் ஆண்டு முதல் அமித்தின் குத்துச்சண்டை பயணம் தொடங்கியது. 2017இல் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று பதக்க வேட்டையைத் தொடங்கிய அவருக்கு, அதன்பிறகு ஏறுமுகம்தான்.
அதே ஆண்டில் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று தனது பெயரை இந்தியா முழுவதும் அறிந்து கொள்ளச் செய்த அமித், கடந்த ஆண்டு காமன்வெல்த்தில் வெள்ளியும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஹசன்பாய் துஸ்மடோவை வீழ்த்தி தங்கமும் வென்று வெற்றி நடை போட்டார். 
கடந்த ஏப்ரலில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ ஃபிளை வெயிட் பிரிவில் தங்கம் வென்று இந்திய குத்துச்சண்டையில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரத் தொடங்கினார்.
இந்த நிலையில், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது.
இறுதிச்சுற்றில் 52 கிலோ எடைப் பிரிவில் நம்பிக்கையுடன் களமிறங்கினார் அமித் பங்கால்.
ஒட்டுமொத்த தேசமும் இவர் ஜெயிக்க பிரார்த்தனை செய்தது. இருப்பினும், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதீன் சொய்ரோவிடம் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார்.

பயிற்சிக்கு தாமதம்; ஆனால் சாதனை!

"முன்பெல்லாம் பயிற்சிக்கு எப்போதும் தாமதமாகவே அமித் வருவார். இருப்பினும், அவர் சிறப்பாக பயிற்சி மேற்கொள்வார். அவரை என்றுமே நாங்கள் விட்டுக்கொடுத்தது கிடையாது'  என்று பயிற்சியாளர் சி.ஏ.குட்டப்பா தெரிவித்தார்.
"உண்மைதான், விடுமுறை நாட்களில் பயிற்சி மையத்திலிருந்து சீக்கிரமே கிளம்பி விடுவேன். எனக்கு பொறுமை கிடையாது. என்னை பயிற்சியாளர்கள் கடுமையாக சாடுவார்கள். நான் அப்படி தான் இருந்தேன். ஆனால், இப்போது அப்படியில்லை. நான் தான் கடைசியாக பயிற்சி மையத்திலிருந்து வெளியே செல்வேன். பயிற்சியாளர்களை என்னுடன் இருக்கச் சொல்லி வலியுறுத்துவேன். இப்போது அதிக பொறுமை வந்துவிட்டது. ஒலிம்பிக்கில் சாதிப்பதே எனது அடுத்த இலக்கு' என்கிறார் அமித் பங்கால்.
2012-இல் ஊக்கமருந்து சோதனையில் அமித் பங்கால் தோல்வி அடைந்ததை அடுத்து, அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர் அளித்த மருந்துதான் காரணம் என்று மேல்முறையீடு செய்தார் அமித். அதைத் தொடர்ந்து, தடைக் காலம் ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.
சர்ச்சையிலிருந்து மீண்டு வந்து தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்கத் தொடங்கினார் ராணுவத்தில் பணிபுரியும் அமித்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு அமித்தின் பெயரை இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்தது. எனினும், ஊக்க மருந்து சர்ச்சையால் இவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
சிறிய கிராமத்தில் விவசாயியின் மகனாகப் பிறந்த அமித் பங்காலை இன்று நாடே வெள்ளி நாயகன் என்று கொண்டாடுகிறது என்றால், எதுவும் சாத்தியம் என்று நினைத்து அவர் தீவிர உழைப்பை செலுத்தியது தான் காரணமாக இருக்க முடியும்.
குத்துச்சண்டை ஜாம்பவானான முகமது அலி சொன்னது இங்கே மிகப் பொருத்தமாக இருக்கும். "சாத்தியமற்றது என்பது உண்மையல்ல. அது ஒரு கருத்து மட்டுமே'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT