தில்லி கேபிடல்ஸ் அணிக்குப் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்
தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரையன் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரையன் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் துபை மற்றும் அபுதாபிக்குச் சென்று சேர்ந்துள்ளார்கள். இதனால் அடுத்த ஏழு நாள்களுக்கு நட்சத்திர விடுதியில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரையன் ஹாரிஸ் (40) நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக அந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த ஜேம்ஸ் ஹோப்ஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து ஹாரிஸைப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தில்லி கேபிடல்ஸ் நியமித்துள்ளது.
2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது அந்த அணியில் ஹாரிஸ் இடம்பெற்றிருந்தார். 2015-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஹாரிஸ், 113 டெஸ்ட் விக்கெட்டுகளும் 44 ஒருநாள் விக்கெட்டுகளும் 4 டி20 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.