தனிமைப்படுத்துதல் காலத்தை நீட்டித்த சிஎஸ்கே: குழம்பும் இதர அணிகள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடவடிக்கைகள் இதர அணிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன...
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள அணிகள் ஒவ்வொருவராகப் பயிற்சியை ஆரம்பித்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடவடிக்கைகள் இதர அணிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் துபை மற்றும் அபுதாபிக்குச் சென்று சேர்ந்துள்ளார்கள். அனைவரும் ஆறு நாள்களுக்கு நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர இதர அணிகள் அனைத்தும் இன்று மற்றும் நாளை முதல் தங்கள் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளன. ஆகஸ்ட் 20 அன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற ராஜஸ்தான் அணியினர் தங்கள் பயிற்சியை ஏற்கனெவே ஆரம்பித்துவிட்டார்கள். அபு தாபியில் தங்கியிருக்கும் கொல்கத்தா, மும்பை அணி வீரர்கள் இன்று முதல் பயிற்சியை ஆரம்பிக்கின்றன. தில்லி அணி நாளை முதல் பயிற்சியை ஆரம்பிக்கிறது.
துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணி, தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தைத் திடீரென நீட்டித்துள்ளது. இன்று முதல் பயிற்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் பயிற்சியை ஆரம்பிக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. துபைக்கு வந்துள்ள ஐபிஎல் அணிகள் ஆறு நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் என்ன காரணத்துக்காக சிஎஸ்கே அணியினர் பயிற்சியை ஆரம்பிக்காமல் விடுதியில் தொடர்ந்து தங்க முடிவெடுத்துள்ளார்கள் என்பது கேள்வியை வரவழைத்துள்ளது. சிஎஸ்கே அணியின் இந்த நடவடிக்கை குறித்து சிஎஸ்கே தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த அனைத்து ஐபிஎல் வீரர்களுக்கும் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் முதல், 3-வது மற்றும் 5-வது நாள்களில் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அனைத்து முடிவுகளிலும் கரோனா இல்லை என்பது உறுதியான பிறகே பயிற்சியைத் தொடங்க வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சிஎஸ்கே அணியினரின் இந்த திடீர் முடிவை அனைத்து அணிகளும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. கரோனா பரிசோதனைகளின் முடிவுகளை அனைத்து அணிகளும் இதர அணிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அணிகளின் சார்பாக ஐபிஎல்-லுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி மற்ற எல்லா அணிகளை விடவும் சிஎஸ்கே அணி தான் கடைசியாகப் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தோனி, ரெய்னா, ராயுடு, பியூஷ் சாவ்லா, தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டார்கள்.