இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் பகுதியில் இந்தியா 41/2
டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் புஜாராவும் காண்பித்து விட்டார்கள்
கடந்த சில மாதங்களாக ஐபிஎல், ஒருநாள், டி20 தொடர்களையே பார்த்து வந்த நமக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகை ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் புஜாராவும் காண்பித்து விட்டார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் பகுதியில் இந்திய அணி, 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பிரித்வி ஷா மீது மிகவும் நம்பிக்கை வைத்து இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பளித்தார் கோலி. எனினும் முதல் ஓவரிலேயே 2 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா.
இதனால் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மயங்க் அகர்வாலுக்கும் புஜாராவுக்கும் ஏற்பட்டது. நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் ரோபோ போல துல்லியமாகப் பந்துவீசி ஆட்டத்தின் போக்கை அப்படியே தொடரவிட்டார்கள்.
40 பந்துகள் வரை எதிர்கொண்ட மயங்க் அகர்வால், கம்மின்ஸின் அற்புதமான பந்தில் போல்ட் ஆனார். ஆடுகளத்தில் ஸ்விங் பெரிதாக இல்லாததால் பந்தை நன்கு பிட்ச் செய்து சீம் மூவ்மெண்ட் கிடைக்க முயன்று அதில் வெற்றி பெற்றார் கம்மின்ஸ். தன்னால் இயன்ற அளவு போராடினார் மயங்க் அகர்வால்.
அடிலெய்ட் ஆடுகளம் என்றால் கோலிக்கு மிகவும் இஷ்டம். நான்கு டெஸ்டுகளில் 431 ரன்கள், 4 சதங்கள் எடுத்துள்ளார். புதிய பந்தில் இரு விக்கெட்டுகள் பறிபோனதால் முதல் பகுதி நிறைவடையும் வரை வேறு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு புஜாராவுக்கும் கோலிக்கும் ஏற்பட்டது. ஐபிஎல், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுகளில் ஆடாமல் போனால் ஆஸ்திரேலியாவில் கடந்த முறை விட்ட இடத்திலிருந்து புஜாரா தொடர்வது போல அவருடைய ஆட்டம் அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென்று ஒரு வீரர் இனிமேல் நமக்குக் கிடைப்பாரா?
முதல் டெஸ்டின் முதல் பகுதியில் இந்திய அணி, 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 88 பந்துகளில் 17 ரன்கள், கோலி 22 பந்துகளில் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். விளக்கொளியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் இன்றைய ஆட்டத்தின் அடுத்த சுவாரசியமாக இருக்கப் போகிறது.
2006-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்டில் முதல் பகுதியில் குறைவாக ரன்கள் எடுத்திருப்பது இப்போதுதான் (2006-ல் 15.4 ஓவர்களில் இங்கிலாந்து 36/1 ரன்கள் எடுத்தது). டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு கடினமானது என்பதை டெஸ்ட் தொடரின் முதல் பகுதியிலேயே நிரூபித்துவிட்டார்கள் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள்.