மெல்போர்ன் டெஸ்டில் வெற்றியை நோக்கி நகரும் இந்திய அணி: 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 133/6
ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
செய்திகள்மெல்போர்ன் டெஸ்டில் வெற்றியை நோக்கி நகரும் இந்திய அணி: 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 133/6
ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
மெல்போா்னில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே 72.3 ஓவா்களில் 195 ரன்களுக்குச் சுருண்டது. பும்ராவின் வேகத்திலும், அஸ்வினின் சுழலிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனா்.
2-ம் நாள் முடிவில் இந்திய அணி 91.3 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 82 ரன்கள் முன்னிலை ஆகும். இந்நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரஹானே 112 ரன்களும் ஜடேஜா 57 ரன்களும் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ், 4, லபுசான் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஸ்மித் 8 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது 4-வது ஓவரை வீசியபோது தடுமாறினார். இதனால் காயம் காரணமாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணிக்கு இது பின்னடைவாக இருக்கும் என ரசிகர்கள் அஞ்சினார்கள். ஆனால் பும்ரா, அஸ்வின், ஜடேஜா, சிராஜ் ஆகிய நால்வரும் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணி ஆதிக்கம் செலுத்த உதவினார்கள்.
137 பந்துகள் எதிர்கொண்டு 40 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் மேத்யூ வேட், 40 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார். கேப்டன் டிம் பெயின் ஜடேஜா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 3-ம் நாளிலேயே வெற்றி பெறும் நிலைமை ஏற்பட்டது.
எனினும் 7-வது விக்கெட்டுக்கு கிரீன் - கம்மின்ஸ் 18.2 ஓவர்கள் விளையாடி 34 ரன்கள் எடுத்து, ஆஸி. அணி 2 ரன்கள் முன்னிலை பெற உதவினார்கள்.
3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 66 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன் 17, கம்மின்ஸ் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
4-ம் நாளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-1 என தொடரைச் சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.