செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று (செவ்வாய்கிழமை) பாட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 173 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு அட்டகாசமான தொடக்கம் அளித்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்ஸேனா இந்த ஆட்டத்திலும் அட்டகாசமான தொடக்கத்தையே அளித்தனர். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 4-க்கும் குறைவு என்பதால் இருவரும் நிதானத்தைக் கையாண்டு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு முதலில் 50 ரன்களைக் கடக்க, பிறகு அதை நீட்டித்து 100 ரன்களை எட்டியது. முதலில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் இதன்பிறகு ஓரளவு அதிரடி காட்டத் தொடங்கினார். இதையடுத்து, சக்ஸேனாவும் தனது அரைசதத்தை எட்டினார். எனவே, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எளிதானது.

இந்நிலையில், 36-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்த ஜெய்ஸ்வால் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதேசமயம், அவர் சதத்தையும் பூர்த்தி செய்தார். 

35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்த இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால் 105 ரன்களும், சக்ஸேனா 59 ரன்களும் எடுத்தனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT