செய்திகள்

காலையில் சதமடித்து மாலையில் பானிபூரி விற்பேன்: யு-19 வீரர் ஜெய்ஸ்வாலின் வெற்றிக்கதை!

எழில்

இந்தியாவுக்கு எதிரான யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிச்சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது இந்திய அணி. 173 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவா்களிலேயே விக்கெட் இழப்பின்றி 176 ரன்களைக் குவித்து வெற்றியை ஈட்டியது. 18 வயது தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 105 ரன்களை விளாசி சதமடித்தாா். மேலும் இறுதிச்சுற்றுக்கு முன்பு வரை, 5 ஆட்டங்களில் 312 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனால் கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளார். ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார் ஜெய்ஸ்வால். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சச்சின் விளையாடுவதைப் பார்த்து எனக்கும் மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்கிற ஆசை தோன்றியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறிய ஊரில் வசித்து வந்தோம். மும்பைக்கு என் தந்தையுடன் வந்தேன். என் உறவினர் வீட்டில் நீண்ட நாள் தங்க முடியாத சூழல். ஆஸாத் மைதான் என்கிற கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவேண்டும், பயிற்சி பெறவேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. ஆனால், ஊருக்குப் போலாம் என என் தந்தை சொன்னபோது நான் இங்கேயே இருந்து விளையாடுகிறேன் எனச் சொல்லிவிட்டேன். ஆஸாத் மைதானுக்கு வந்தேன். அங்கு ஒரு கிரிக்கெட் ஆட்டம் நடந்துகொண்டிருந்தது. நீ நன்றாக ஆடினால், இங்கு நீ தங்கிக்கொள்ள ஒரு கூடாரம் தருகிறோம் என்றார்கள். நான் நன்றாக விளையாடியதால் தங்கிக்கொள்ள ஒரு கூடாரம் கிடைத்தது. ஆனால் அதில் விளக்கு எதுவும் இல்லை. கழிப்பறை வசதிகளும் இல்லை. 

என் வீட்டிலிருந்து எனக்குப் பண உதவி கிடைக்காது. எனவே மாலை வேளையில் பானிபூரி விற்று கொஞ்சம் காசு சேர்ப்பேன். ஆனால் என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்கள், பானிபூரி கடைக்கு வரும்போது மட்டும் சங்கடமாக இருக்கும். காலையில் செஞ்சுரி அடித்துவிட்டு மாலையில் பானிபூரி விற்பதைக் கஷ்டமாக உணர்ந்தேன். எனினும் கவனம் எல்லாம் கிரிக்கெட்டில் தான் இருந்தது. ஜ்வாலா சிங் என்கிற பயிற்சியாளர் எனக்கு ஊக்கமளித்தார். உணவு வாங்கக் காசு இருக்காது,  தங்க வீடு இருக்காது. ஆனால் அவர் என்னிடம், நீ கிரிக்கெட்டில் கவனம் செலுத்து, மற்றது எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். 2019-ல் விஜய் ஹசாரே போட்டிக்கான மும்பை அணிக்குத் தேர்வாகி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் என்கிற பெருமையை அடைந்தேன் என்றார்.

ஜார்கண்டுக்கு எதிராக இரட்டைச் சதமெடுத்து உலக சாதனை படைத்தார் ஜெய்ஸ்வால். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்து 9-வது இந்திய வீரர். அலூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார் ஜெய்ஸ்வால். அதில் 12 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள். அதாவது 140 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகளில் கிடைத்தன. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 17 வயதில் இரட்டைச் சதமெடுத்த முதல் வீரரும் ஜெய்ஸ்வால் தான். இதற்கு முன்பு, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த இளம் வீரர், ஆலன் பாரோ. 20 வயது 275 நாள்கள். 1975-ல் அதைச் சாதித்தார். ஆனால் ஜெய்ஸ்வால் 17 வயது 292 நாள்கள் என மிகக்குறைந்த வயதில் இச்சாதனையை நிகழ்த்தி விட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT