இலக்கு நிர்ணயிப்பது எல்லாம் பிறகுதான்.. தற்போதைக்கு இதுதான் முக்கியம்: அஸ்வின்
ரஹானேவும், விஹாரியும் 4-ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முழுவதும் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
செய்திகள்இலக்கு நிர்ணயிப்பது எல்லாம் பிறகுதான்.. தற்போதைக்கு இதுதான் முக்கியம்: அஸ்வின்
ரஹானேவும், விஹாரியும் 4-ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முழுவதும் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ரஹானேவும், விஹாரியும் 4-ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முழுவதும் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணியின் டாப் ஆர்டர், இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"ஆடுகளம் முதல் நாளைப் போல் இல்லாதபோதிலும் நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல அளவில் மிகச் சரியாக பந்துவீசுகின்றனர். இந்த ஆட்டம் தொடங்கியது போலவே அவர்கள் எங்களுக்கு கடினமாக்கிவிட்டார்கள். அவர்கள் 65 ஓவர்கள் வீசியுள்ளனர். அவர்கள் நாளை எப்படி பந்துவீசவுள்ளனர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாளை காலை இந்திய அணி கூடுதலாக ஒரு செஷன் பேட்டிங் செய்ய வேண்டும்.
நியூஸிலாந்து அணியைக் கட்டுப்படுத்துவதற்கான வெற்றி இலக்கை கணிக்க முடியாது. இன்னும் 6 செஷன்கள் உள்ளன. நியூஸிலாந்தைக் கட்டுப்படுத்துவதற்கு இதுதான் சரியான இலக்காக இருக்கும் என்பதைக் கூறுவதற்கான நிலையிலேயே நாங்கள் தற்போது இல்லை. நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 348 ரன்களை நெருங்கினால் வேண்டுமானால், இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கலாம்.
இருப்பினும் அது வெகு தொலைவில் உள்ளது. நேர்மையாகக் கூற வேண்டுமானால், ஒரு நேரத்தில் ஒரு பந்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். காரணம், ஆடுகளம் அப்படி செயல்படுகிறது.
எந்த அளவுக்கு மிகச் சிறிய இலக்கை எங்களுக்கு நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது எங்களுக்கு சாதகமாக அமையும். ரஹானேவும், விஹாரியும் சிறப்பாக பேட் செய்தனர். இதே நிலையில் இருந்து இதேபோல் பேட் செய்வதைத் தொடருவதே முக்கியமாகும். அவர்கள் தற்போது நல்ல நிலையை அடைந்துள்ளனர். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்றார்.