கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்: தனிமைப்படுத்திக்கொண்ட கெளதம் கம்பீர்
பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை...
தனது குடும்பத்தில் கரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது:
குடும்பத்தில் கரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார் கெளதம் கம்பீர்.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் 2018 டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றார். இந்தியாவின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர் கடந்த 2004 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். 9 சதம், 22 அரை சதத்துடன் 4199 ரன்களையும், ஒருநாள் ஆட்டங்களில் 2003 முதல் 2013 வரை ஆடி 11 சதம், 34 அரை சதங்களுடன் மொத்தம் 5238 ரன்களை குவித்தார். குறிப்பாக 2011 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா, தில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார் கம்பீர்.