சர்வதேசத் தொடர்கள்: மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பும் கிரிக்கெட்!
இந்தியா - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான...
கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறாமல் இருந்தன.
உலகக் கோப்பை, ஐபிஎல் போன்ற போட்டிகளும் கிரிக்கெட் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த மாதத்திலிருந்து பழைய நிலைமைக்கு மீண்டும் திரும்புகிறது கிரிக்கெட். சர்வதேசத் தொடர்கள் மீண்டும் நடைபெற ஆரம்பித்துள்ளன.
இந்த வாரம் மூன்று சர்வதேசத் தொடர்கள் தொடங்குகின்றன.
நவம்பர் 27 முதல் இந்தியா - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 27 முதல் டி20 தொடர் தொடங்குகிறது. அதன்பிறகு டிசம்பர் 4 முதல் தொடங்கும் ஒருநாள் தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் நியூலேண்ட்ஸ், பார்ல் ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன.
நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் வரும் 27-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து அடுத்த இரு ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகிறது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.
மேலும் எல்பிஎல் (Lanka Premier League) எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி, நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறவுள்ளது. 21 நாள்களில் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கண்டி டஸ்கர்ஸ், டம்புல்லா ஹாக்ஸ், கேலே கிளாடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், கொழும்பு கிங்ஸ் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இந்த வாரம் முதல்...
நவம்பர் 26 முதல் - எல்பிஎல் டி20 போட்டி
நவம்பர் 27 முதல் - இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்
நவம்பர் 27 முதல் - நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர்
நவம்பர் 27 முதல் - இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்