பிக் பேஷ் டி20 போட்டியில் விளையாடுகிறாரா யுவ்ராஜ் சிங்?
இதுவரை இப்போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் விளையாடியதில்லை.
செய்திகள்பிக் பேஷ் டி20 போட்டியில் விளையாடுகிறாரா யுவ்ராஜ் சிங்?
இதுவரை இப்போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் விளையாடியதில்லை.
பிரபல முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், பிக் பேஷ் ஆஸ்திரேலிய டி20 லீக் போட்டியில் விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை உள்பட பல்வேறு வெற்றிகளுக்கு வித்திட்ட யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஒரு வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
304 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடி 8701 ரன்களும் 40 டெஸ்டுகளில் விளையாடி 1900 ரன்களும் 58 டி20 ஆட்டங்களில் விளையாடி 1177 ரன்களும் யுவ்ராஜ் சிங் எடுத்துள்ளார். டெஸ்டில் 3 சதங்களும் ஒருநாள் ஆட்டங்களில் 14 சதங்களும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் பிக் பேஷ் ஆஸ்திரேலிய டி20 லீக் போட்டியில் விளையாட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் யுவ்ராஜ் சிங். இத்தகவலை யுவ்ராஜ் சிங்கின் மேலாளர் ஜேசன் வார்னே உறுதிப்படுத்தியுள்ளார். பிக் பாஷ் போட்டியில் யுவ்ராஜ் சிங்கை விளையாட வைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஆர்வம் காண்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வருடம் 10-வது பிக் பேஷ் போட்டி நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 முதல் தொடங்கவுள்ளது. எனினும் இதுவரை இப்போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் விளையாடியதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றால் மட்டுமே இந்திய வீரர்களால் இதுபோன்ற வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐயிடமிருந்து அனுமதி கிடைக்கும். ஐபிஎல் போட்டியிலிருந்தும் யுவ்ராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டதால் பிக் பாஷ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர் விரைவில் பெறவுள்ளார். இதற்கு முன்பு குளோபல் டி20 லீக் மற்றும் அபுதாபி டி10 லீக் போட்டிகளில் யுவ்ராஜ் சிங் விளையாடியுள்ளார்.