பேட்ஸ்மேனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்: மன்கட் சர்ச்சை பற்றி அஸ்வின் - பாண்டிங் உரையாடல்
பேட்ஸ்மேனும் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியேறும்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்...
செய்திகள்பேட்ஸ்மேனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்: மன்கட் சர்ச்சை பற்றி அஸ்வின் - பாண்டிங் உரையாடல்
பேட்ஸ்மேனும் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியேறும்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்...
மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வது குறித்து தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடனான உரையாடல் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் ஆர். அஸ்வின்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மன்கட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வதற்கு தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி அவர் பேட்டியளித்ததாவது:
கடந்த வருடம் மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தபோது என்னுடைய அணி வீரர்களிடம் நான் சொன்னேன், இதுபோல யாராவது செய்ய நினைத்தால் நாம் அதுபோன்ற ஒரு கிரிக்கெட்டை விளையாட எண்ணவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றேன். எனவே இம்முறை அஸ்வினுடன் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். அது மிகவும் தீவிரமாக இருக்கும் எனத் தெரியும். ஆனால் என் கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அதைச் செய்ததாக அஸ்வின் கூறலாம். ஆனால் கிரிக்கெட்டில் அது நியாயம் அல்ல. தில்லி கேபிடல்ஸ் அணி அதுபோல விளையாடக் கூடாது என எண்ணுகிறேன் என்றார்.
மன்கட் அவுட் தொடர்பாக பாண்டிங்கின் கருத்தால் அஸ்வினுக்கு ஆதரவு பெருகியது. விதிமுறைப்படி நடக்க எண்ணும் பந்துவீச்சாளரை பாண்டிங் தடுப்பது ஏன், பேட்ஸ்மேன் விதிமுறைகளை மீறும்போது அதற்குரிய விளைவுகள் இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில் மன்கட் சர்ச்சை குறித்து தில்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடனான உரையாடல் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் அஸ்வின். அதில் அவர் கூறியதாவது:
என்னங்க, இப்படிச் சொல்லிவிட்டீர்கள் என்று ரிக்கி பாண்டிங்கிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் - மன்கட் சர்ச்சை போன்ற சம்பவத்தைத் தவிர்க்க வேண்டும் என்று தான் நான் சொன்னேன். பேட்ஸ்மேன் என்னதான் நன்றாக விளையாடினாலும் மறுமுனையில் இதுபோன்று ஆட்டமிழக்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம் என்றார். நான் இதற்கு ஒப்புக்கொண்டேன்.
ஆனால் அவர்கள் கிரீஸை விட்டு வெளியேறலாமா? பேட்ஸ்மேன்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்ன என்றால், நாங்கள் ரன் எடுக்க முயலவில்லை. இவ்வளவுதான் வெளியே போனோம் என்கிறார்கள். நான் அவர்களிடம் சொன்னேன், பந்துவீச்சாளர்களும் பந்துவீசும்போது நடுவர் அருகே உள்ள கிரீஸிலிருந்து காலை வெளியே வைத்து பந்துவீசலாமா, ஷான் டைட், ஆர்ச்சர் போன்று மணிக்கு 150 கி.மீ. வேகத்துக்குப் பந்துவீசுபவர்கள் இதன்மூலம் காலை கொஞ்சம் வெளியே வைப்பதன் மூலம் 160 கி.மீ. வேகத்துக்குப் பந்துவீசுவார்கள். அப்படி செய்யலாமா என்பதுதான் என்னுடைய கேள்வி.
இதற்கு பாண்டிங் சொன்னார், நான் இதை ஒப்புக்கொள்கிறேன். பேட்ஸ்மேன்கள் கிரீஸை விட்டு வெளியே போகக் கூடாது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன். இந்த விதிமுறைக்கு ஆதரவு தெரிவித்தேன். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேவும் செல்லக் கூடாது. மறுமுனையில் இப்படி ஆட்டமிழக்கவும் கூடாது என்றார்.
கடந்த முறை கிங்ஸ் லெவன் கேப்டனாக நான் இருந்தபோது தில்லி அணியிலிருந்து ரிக்கி பாண்டிங்கும் ஷ்ரேயஸ் ஐயரும் என்னிடம் வந்து, நாங்களும் கிரீஸை விட்டு வெளியே செல்லமாட்டோம். நீங்களும் செல்லவேண்டாம். இதுபோன்ற ஒரு சம்பவத்தைத் தவிர்க்கலாம் என்றார்கள். அது வாஸ்வதவமான பேச்சு தான் என்றார் அஸ்வின்.
பிறகு பாண்டிங்கைப் பேட்டி எடுத்த விடியோவையும் அதனுடன் இணைத்து வெளியிட்டார். அதில் பாண்டிங் கூறியதாவது:
பந்துவீச்சாளர் இதுபோலச் செய்யலாம். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு நகர்ந்து ஏமாற்ற முயலும்போது... இதுபோல பேட்ஸ்மேன் ஏமாற்றுவதைத் தடுக்கும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நோ பாலை மூன்றாம் நடுவர் கண்டுபிடிப்பது போல பேட்ஸ்மேனும் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியேறும்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அணியின் ஸ்கோரிலிருந்து 10 ரன்கள் எடுத்துவிட வேண்டும் என்றார்.
பிறகு அஸ்வின் பேசியதாவது: ஐபிஎல் இறுதிச்சுற்றின் இறுதிப் பந்தில் இப்படி நடந்தாலும் எனக்கு எது நியாயம் என்று படுகிறதோ அதைத்தான் நான் செய்வேன். இப்படிச் செய்யும் பந்துவீச்சாளரை கிரிக்கெட்டின் ஆன்மாவைக் கெடுப்பதாகக் கூறி வில்லனாக்கி விடுகிறார்கள். சரி அதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று பார்த்தால் கிரிக்கெட்டின் ஆன்மா பற்றிய புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை. காரணம், அப்படியொரு புத்தகத்தை இன்னும் உருவாக்கவேயில்லையாம் என்றார்.
ஒரு பவுலர் பந்துவீசுவதற்கு முன்பு ரன்னர் கிரீஸை விட்டு வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் உள்ளது. அதை மன்கட் முறை என அழைக்கின்றனர். இந்த முறையில் அவுட் செய்வது மிகவும் அரிதாகவே நடக்கிறது. ஏற்கெனவே மன்கட் முறையில் அவுட் செய்வது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக கிரீஸை விட்டு நகர்ந்தால், பேட்ஸ்மேன்களுக்கு, எச்சரிக்கை தருவது பவுலர்களின் வழக்கம். அது கண்டிப்பானதில்லை. இந்நிலையில் அஸ்வினும் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
2019 ஐபிஎல் போட்டியில் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது எனது உள்ளுணர்வு மற்றும் விதிகளின்படி தான் என அஸ்வின் கூறினார். நான் செய்தது ஆட்டத்தின் தன்மைக்கு எதிரானது என்றால் கிரிக்கெட் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் ஆட்டத்தின் தன்மை எங்கே பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஐசிசி விதி 41.16-இன்படி மன்கட் முறையில் அவுட் செய்யலாம். ஒருவருக்கு பொருந்தும் விதி ஏன் மற்றொருவருக்கு பொருந்தாது என்றார்.